புயல் இன்று மாலை கரையை கடக்கிறது; சென்னையில் விடிய விடிய காற்றுடன் மழை
புயல் இன்று கரையக் கடப்பதால் பொது மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவறுத்தி உள்ளது.
சென்னை,
வங்கக் கடலில் உருவான பெஞ்சல் புயல் இன்று (சனிக்கிழமை) மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையை கடக்கிறது. புயல் கரையைக் கடக்கும் போது அதி கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.
Live Updates
- 30 Nov 2024 12:52 AM IST
தமிழக கடற்பகுதியை நெருங்கும் பெஞ்சல்
வங்கக் கடலில் உருவாகியுள்ள பெஞ்சல் புயல் தமிழக கடற்பகுதியை நெருங்குகிறது.
சென்னையில் விட்டுவிட்டு தொடரும் மழை, நாளை முதல் தீவிரமடையும் என தகவல்.
சென்னையிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
- 30 Nov 2024 12:49 AM IST
தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை?
தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கீழ் காணும் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடலூர்,
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- சென்னை
- செங்கலபட்டு
- மயிலாடுதுறை
- ராணிப்பேட்டை
- 30 Nov 2024 12:45 AM IST
வண்டலூர் பூங்கா இன்று செயல்படாது
சென்னை,
புயல் எச்சரிக்கையையொட்டி சென்னையில் உள்ள 786 பூங்காக்கள் மூடப்படுவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
அதேபோன்று கடற்கரைக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் கடற்கரை பகுதிகளுக்கோ அல்லது பூங்காவிற்கோ செல்ல வேண்டாம். பூங்காக்களில் உள்ள பழமையான மரங்கள் விழுந்து விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பாதுகாப்பு கருதி அனைத்து பூங்காக்களும் மூடப்படுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இன்று (சனிக்கிழமை) ‘‘பெஞ்ஜல்'' புயல் கரையை கடக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வண்டலூர் உயிரியல் பூங்கா இன்று செயல்படாது. பொதுமக்கள் பார்ப்பதற்கு தடை செய்யப்பட்டு மூடப்படுகிறது.
- 30 Nov 2024 12:43 AM IST
பெஞ்சல் புயல் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்
*வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல், இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது
* வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம்
* காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
*கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிப்பு
* சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு
*காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என தெரிவிப்பு
*மெட்ரோ ரெயில்சேவை வழக்கம் போல் இருக்கும்.
*மாநகர பஸ் சேவை வழக்கம் போல இயங்கும். புயல் கரையக் கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் மாநகர பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.
- 30 Nov 2024 12:39 AM IST
பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்க உள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னை மெரினா கடற்கரை சாலை, மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது.
- 30 Nov 2024 12:36 AM IST
இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
பெஞ்சல் புயல் காரணமாக இன்றும், நாளை (ஞாயிற்றுக்கிழமை), நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தமிழ்நாட்டில் அனேக இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பதிவாகக்கூடும். எனவே இங்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது.
இதுதவிர, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.