மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!


மகளிர் உரிமைத்தொகை கொடுத்த வெற்றி!
x

மராட்டிய சட்டசபை தேர்தலில் ‘மகா யுதி’ கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது.

மராட்டியம், ஜார்கண்ட் மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தல்களும், கேரளா, கர்நாடகம், உத்தரபிரதேசம் உள்பட 15 மாநிலங்களில் காலியாக உள்ள 2 மக்களவை தொகுதிகள் மற்றும் 48 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தல்களின் முடிவுகளும் பல அதிர்ச்சிகளையும், பல கேள்விகளுக்கு விடைகளையும் கொடுத்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் ரீதியாக பல மாற்றங்களைக்கண்ட மராட்டிய மாநிலம், 3 முதல்-மந்திரிகளால் ஆளப்பட்டது. முதலில் பா.ஜனதா கட்சியை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ், அடுத்து நடந்த அரசியல் மாற்றங்களால் சிவசேனாவின் உத்தவ் தாக்கரே, கடைசியாக ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் முதல்-மந்திரிகளாக இருந்தனர்.

அந்த மாநிலத்தில் பெரிய கட்சிகளாக வலம்வந்த சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் பிளவுபட்டன. சிவசேனா உடைந்து, உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியும், ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியும் இயங்கி வருகிறது. இதுபோல, சரத்பவார் தலைமையில் இயங்கிவந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியும் பிளவுபட்டு, சரத்பவாரின் அண்ணன் மகனான அஜித்பவார் தலைமையில் ஒரு அணி இயங்குகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இரு கட்சிகளிலுமே பிளவுபட்ட அணிகளே தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஆக, இந்தத் தேர்தலில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ, அந்த அணியின் தலைமையில் இயங்கும் கட்சிதான் உண்மையான கட்சி என்றும், தோல்வி அடையும் கட்சி அரசியல் அரங்கில் மங்கிப்போகலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

மொத்தத்தில், ஆட்சி யார் பக்கம்? என்பதோடு, கட்சி யார் பக்கம்? என்பதையும் இந்த தேர்தல் முடிவு காட்டிவிட்டது. இந்த தேர்தலில், பா.ஜனதா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் 'மகா யுதி' கூட்டணியும், காங்கிரஸ், சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகிய கட்சிகளைக்கொண்ட 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியும் போட்டியிட்டன. 6 மாதங்களுக்கு முன்பு நடந்த நாடாளுமன்ற தேர்தலிலும் இதே கூட்டணிகள்தான் மோதின. அப்போது, 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றதால், அந்த வெற்றியே இந்த தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தேர்தல் முடிவுகள் தலைகீழாக அமைந்துவிட்டன. மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 'மகா யுதி' கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளது. 'மகா விகாஸ் அகாடி' கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. பா.ஜனதா அணி வெற்றி பெற்றதற்கு அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், தமிழ்நாடு வழிகாட்டிய மகளிர் உரிமைத்தொகை என்ற அன்பு சகோதரி திட்டமும், தேர்தல் அறிக்கையில் அளித்த விவசாயிகள் கடன் ரத்து வாக்குறுதியுமே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தமிழரான பா.ஜனதா வேட்பாளர் கேப்டன் தமிழ்செல்வன் சயான் கோலிவாடா தொகுதியில் இருந்து 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இதுபோல, ஜார்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரியாக இருந்த ஹேமந்த் சோரன் 5 மாதங்கள் சிறையில் இருந்து வெளியேவந்து போட்டியிட்டாலும், அவருடைய கட்சியான ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ளது. பா.ஜனதா கூட்டணி 24 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது. இங்கும் மகளிர் உரிமைத்தொகைதான் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story