'கவாச்' கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?


கவாச் கருவியை பொருத்த ஏன் இந்த தாமதம்?
x

ரெயில் விபத்துகளை ‘கவாச்' கருவி தடுக்கிறது.

ஒவ்வொரு முறையும் ரெயில் விபத்து நடக்கும் போதெல்லாம் 'கவாச்' கருவி பொருத்தப்பட்டு இருந்தால் இந்த விபத்தை தடுத்து இருக்கலாமே என்ற கருத்து எல்லா பக்கங்களில் இருந்தும் கிளம்பும். சில நாட்களில் அந்த பேச்சு அடங்கிப்போய்விடும். ஆனால், இப்போது கடந்த ஜூன் மாதம் 17-ந்தேதி மேற்கு வங்காளத்தில் உள்ள அகர்தாலாவில் இருந்து சியல்டா நகருக்கு சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் ரங்காபாணி ரெயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நின்று கொண்டிருந்தபோது, அதே ரெயில் பாதையில் அதற்கு பின்னால் வந்து கொண்டிருந்த சரக்கு ரெயில் பயங்கரமாக மோதியதில், அந்த ரெயிலின் டிரைவர் உள்பட 11 பேர் இறந்துவிட்டனர். மேலும் 25 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுபோல, கடந்த ஆண்டு ஒடிசா மாநிலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த ஒரு ரெயில் விபத்துக்குள்ளானதில் 296 பேர் உயிரிழந்து ஏராளமானோர் காயமடைந்தனர். கடந்த மாதம் 11-ந்தேதி திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையிலும் ரெயில் விபத்து ஏற்பட்டது. இந்த பகுதிகளில் எல்லாம் ரெயில் விபத்துகளை தடுக்கும் 'கவாச்' கருவி மட்டும் பொருத்தப்பட்டிருந்தால், இந்த விபத்துகளெல்லாம் நடந்திருக்காதே, இதைப் பொருத்த ஏன் தாமதம்? இதைப் பொருத்த செலவு அதிகம் ஆகும் என்றாலும், பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டால், இதையெல்லாம் பொருட்படுத்தக்கூடாது என்ற குரல் உரக்க எழும்புகிறது.

விபத்தே நடக்கக்கூடாது என்ற வகையில், ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிறுவனம் வடிவமைத்ததுதான் இந்த 'கவாச்' சாதனமாகும். பல்வேறு கருவிகளை உள்ளடக்கிய 'கவாச்' சாதனத்தில் ரெயில் பாதையில் செல்போன் டவர் போல கோபுரங்கள் அமைப்பது, கேபிள்கள் பதிப்பது, தண்டவாளத்தில் ரேடியோ அதிர்வலை கருவியை பொருத்துவது, மற்றும் ரெயில் என்ஜின்கள், ரெயில் நிலையங்களிலும் 'கவாச்' கருவியைப் பொருத்துதல் போன்ற பல பணிகள் மேற்கொள்ளப்படவேண்டும். இதுபோல இன்னும் சில சாதனங்கள் பொருத்தப்படவேண்டும். இதை பொருத்திவிட்ட பிறகு, ஒரே தண்டவாளத்தில் இரு ரெயில்கள் சென்று கொண்டிருந்தாலோ, அதிவேகத்தில் சென்றாலோ, சிக்னலை மீறி ரெயில் சென்றாலோ, எதிரும் புதிருமாக சென்றாலோ, பருவநிலை மோசமாக இருந்தாலோ 'கவாச்' கருவி உடனடியாக டிரைவருக்கு அபாய எச்சரிக்கை அளிக்கும். அதைக்கேட்டு டிரைவர் உடனடியாக நிறுத்தாமலோ, 15 கிலோ மீட்டருக்கும் குறைவாக வேகத்தை குறைக்காமல் இருந்தாலோ 'கவாச்' கருவி தானாகவே 'பிரேக்' பிடித்து ரெயிலை நிறுத்திவிடும்.

இந்தியாவில் இப்போது மொத்தம் உள்ள 68 ஆயிரம் கிலோ மீட்டர் நீள ரெயில் தண்டவாளத்தில் 1,465 கிலோ மீட்டர் தூரத்திலும், 144 ரெயில்களிலும் தென் மத்திய ரெயில்வேயில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், சில மண்டல ரெயில்வேக்களில் 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு பொருத்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தென்னக ரெயில்வே இல்லை என்பது பெரிய குறையாகும். இங்கும் வந்தே பாரத் ரெயில்கள், தேஜஸ் ரெயில்கள், அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என்று ஏராளமான ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 'கவாச்' கருவியை பொருத்த ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.50 லட்சமும், ஒரு ரெயில் என்ஜினில் பொருத்த ரூ.70 லட்சமும் ஆகும். இப்போது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நமது எம்.பிக்கள் தமிழ்நாட்டில் ஓடும் ரெயில்களில் 'கவாச்' கருவியை பொருத்த வலியுறுத்தி, பயணிகள் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்.


Next Story