அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டது!


The political game has begun!
x

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது.

சென்னை,

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. அதற்கு இன்னும் 16 மாதங்கள் இருந்தாலும், இப்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. உள்கட்சி ரீதியாக தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் சில கட்சிகள் தங்கள் அமைப்புகளை வலுப்படுத்த தொடங்கிவிட்டன. அடிக்கடி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிக்கும் வேலைகள் மும்முரமாக நடக்கின்றன. தி.மு.க.வில் அமைச்சர்கள் மாவட்டந்தோறும் கட்சிப்பணிகளில் மிகத்தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க.வில் மாவட்ட வாரியாக கள ஆய்வுக்கூட்டங்கள் நடக்கின்றன.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஜனவரி மாதம் தேர்தல் நடக்கவேண்டிய சூழ்நிலையில், அது இப்போது நடக்காது என்றே தெரிகிறது. ஏனெனில், அரசு இன்னும் தொகுதி வரையறை பணிகளை முடிக்கவில்லை. எனவே, அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சட்டசபை தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டன. குறிப்பாக, எதிர்க்கட்சிகள் அவ்வப்போது அரசை எதிர்த்து அறிக்கைகள் விடுவதும், அதற்கு உடனுக்குடன் அமைச்சர்கள் பதில் அறிக்கை விடுவதும் தற்போது வழக்கமாகி வருகிறது.

சமீப காலங்களாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, எந்த பிரச்சினை என்றாலும், முதல் தலைவராக தினமும் அறிக்கைவிட்டு வருகிறார். அதுபோல, பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் அறிக்கைகளுக்கும், பேச்சுகளுக்கும் அமைச்சர்கள் தங்கள் பேட்டிகளின்போது பதிலளித்து விடுகிறார்கள். சமீபத்தில் மத்திய மந்திரி வழங்கிய ஒரு பதிலுக்கும், கனிமொழி எம்.பி., 'ஒரு அரசாங்கம் இரு குரல்கள்' என்ற தலைப்பில் பதிலளித்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய்யும் ஆவேசமாக அரசியல் பேச தொடங்கிவிட்டார். இதுவரை தி.மு.க. சார்பில் அவருடைய எந்த கருத்துகளுக்கும் பதில் வெளியிடப்படாத நிலை மாறி, இப்போது அவருக்கும் பெயர் சொல்லாமல் பதில் வருகிறது. சமீபத்தில் அவர் சமூகவலைதளத்தில், ''தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரமளிக்கின்றன. பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருவதைத் தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை அளித்த யோசனையின்படி, தனி இணையதளத்தை அரசு உருவாக்கி அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.

உடனடியாக அவர் பெயரைக் குறிப்பிடாமல் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இதற்கு பதில் அளித்தார். 'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது' என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு நிறைவேற்றும் திட்டங்களை பட்டியலிட்டு இறுதியாக, ''பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான எந்த வன்முறையையும் இந்த அரசு சகித்துக்கொள்ளாது. மிகுந்த கண்காணிப்புடன் உறுதியான நடவடிக்கைகளை எப்போதும் எடுத்து வருகிறது'' என்று பதிலளித்துள்ளார். இதேபோல், கடந்த சனிக்கிழமை அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய அரசியல் தாக்குதல்களுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் ரகுபதி, பி.கே.சேகர்பாபு, கனிமொழி எம்.பி. ஆகியோர் சூடாக பதில் அளித்துள்ளனர். ஆக, அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும் இப்போதே 'சபாஷ் சரியான போட்டி' என்ற வகையில், அரசியல் ஆட்டம் தொடங்கிவிட்டது.


Next Story