சிறு தொழில்கள் வளர்ச்சிக்கு 'தருண் பிளஸ்'!
‘தருண் பிளஸ்’ திட்டத்தின் கீழ் மிக எளிதாக ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும்.
சென்னை,
இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி அதிகமாக இருந்தாலும், சிறு தொழில் வளர்ச்சி என்பது அபரிமிதமாக இருந்ததை யாரும் மறுக்க முடியாது. குறிப்பாக, பெண்கள் சிறிய தொழில்கள் மூலம் தொழில் முனைவோர்களாக முன்னேறி வருகிறார்கள் என்றால், அது மத்திய அரசாங்கம் அறிவித்த முத்ரா யோஜனா கடன் திட்டத்தால்தான். 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடியால், பெரு நிறுவனங்கள் அல்லாத விவசாயம் சாராத சிறு மற்றும் குறு தொழில்களை தொடங்க ரூ.10 லட்சம் வரை கடன் வழங்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்தான் முத்ரா யோஜனா கடன் திட்டமாகும்.
இந்த முத்ரா கடனை, வங்கிகள் மற்றும் சிறு வங்கிகள் போல் செயல்படும் நிதி நிறுவனங்களில் எந்தவித பிணையுமின்றி பெற முடியும். 'தன் கையே தனக்கு உதவி' என்று முன்னேறத் துடிப்பவர்களுக்கு இந்த கடன் திட்டம் உதவிகரமாக உள்ளது. 3 பிரிவுகளில் முத்ரா கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிஷு என்ற பிரிவில் ரூ.50 ஆயிரம் வரையிலும், கிஷோர் என்ற பிரிவில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரையிலும், தருண் என்ற பிரிவில் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலும் சிறு, குறு தொழில்களை தொடங்க கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த முத்ரா கடன் திட்டம் நிறைய பெண்களை தொழில் தொடங்க வைத்துவிட்டது. வாழ வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த பெண்கள் பலர் முத்ரா கடன் மூலம் முதலாளிகளாகிவிட்டனர். சிஷு திட்டத்தின் கீழ் இதுவரை பெண்கள் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 472 கோடியே 51 லட்சமும், கிஷோர் திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 370 கோடியே 49 லட்சமும், தருண் திட்டத்தின் கீழ் ரூ.13 ஆயிரத்து 454 கோடியே 27 லட்சமும் கடனாக பெற்றிருக்கிறார்கள்.
பெண்கள் மட்டுமல்லாமல், சிறுபான்மையினர் மற்றும் புதிதாக தொழில் தொடங்க முனைப்பு காட்டியவர்களும் ஏராளமாக கடன் வாங்கி பலன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தின் வெற்றியால் நாட்டில் ஏற்பட்டுள்ள தொழில் வளர்ச்சியும், ஏராளமானோர் தொழில் தொடங்கியுள்ளதையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த கடன் தொகையின் வரம்பு ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பு இப்போது 'தருண் பிளஸ்' என்ற பெயரில் செயல் வடிவம் பெற்று நடைமுறைக்கு வந்துவிட்டது.
தருண் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை கடன் பெற்று முறையாக செலுத்தியவர்கள் இந்த 'தருண் பிளஸ்' திட்டத்தின் கீழ் இப்போது மிக எளிதாக ரூ.20 லட்சம் வரை கடன் பெற்றுக்கொள்ள முடியும். ரூ.20 லட்சம் வரை கடன் பெற்று, சற்று பெரிய அளவில் தொழில் தொடங்க உதவும் இந்த 'தருண் பிளஸ்' திட்டம் இன்னும் எண்ணற்ற பெண்கள் உள்பட ஏராளமானோர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப்போகிறது என்பதில் சந்தேகமேயில்லை. ஏற்கனவே, முத்ரா திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் இருக்கும் தமிழ்நாட்டில் இந்த 'தருண் பிளஸ்' திட்டத்தின் மூலம் நிறைய பேர் கடன் பெற்று தொழில் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுவார்கள் என்ற நம்பிக்கை அதிகமாக உள்ளது.