கல்வி கட்டிடங்களுக்கு வரன்முறை


கல்வி கட்டிடங்களுக்கு வரன்முறை
x

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 30 ஆயிரத்து 435 மனைகள் வரன்முறைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வணிகரீதியான கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வழிபாட்டு தலங்கள் ஏன் குடியிருப்பு கட்டிடங்கள் என்றாலும் அதற்கான வரைபட அனுமதியை பெற்ற பின்புதான் கட்டிடங்கள் கட்ட முடியும். கடந்த காலங்களில் அதற்கு சாதாரணமாக 6 மாதம் வரை ஆகி கொண்டு இருந்தது. ஆனால் இப்போது ஒற்றை சாளர நடைமுறையில் இருப்பதால் 70 நாட்களில் அனைத்து அனுமதிகளையும் பெற்று கட்டிடம் கட்ட தொடங்கி விடுகிறார்கள். மேலும் பல பெரிய தொழிற்சாலைகள், வணிக கட்டிடங்கள் கட்டிட அனுமதி பெறுவதற்கு அரசின் பல துறைகளிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும். அதற்கும் நிறைய காலதாமதம் ஆகி கொண்டு இருந்தது. இப்போது அதற்கு நல்ல நடைமுறை அமலில் இருக்கிறது. அரசு துறைகளிடம் தடையில்லா சான்றுக்கு ஒருவர் விண்ணப்பம் செய்தால் 30 நாட்களுக்குள் தடையில்லா சான்று வழங்கி விட வேண்டும். அப்படி வழங்கவில்லையென்றாலும் மகிழ்ச்சி தான். ஏனென்றால் 30 நாட்களுக்கு பிறகு தடையில்லா சான்று தானாக விண்ணப்பம் செய்தவருக்கு வழங்கப்பட்டதாக கருதப்பட்டுவிடும்.

மேலும் 20-10-2016-க்கு முன்னர் ஒப்புதல் எதுவுமின்றி உருவாக்கப்பட்ட மனைகள் வரன்முறை செய்யப்பட்டு வருகிறது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 30 ஆயிரத்து 435 மனைகள் வரன்முறைகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. பல கல்வி நிறுவன கட்டிடங்கள் முறையான அனுமதி இல்லாமல் கட்டப்பட்டிருந்தன. அந்த கட்டிடங்களையெல்லாம் இடிக்க உத்தரவிட்டால், ஏராளமான மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுவிடும். எனவே இதை செய்யாமல் அந்த கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு வரன்முறை செய்தால் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அதேநேரத்தில் கட்டிடங்களையும் வரன்முறை செய்தது போலாகிவிடும் என்ற நோக்கத்தில் இந்த வரன்முறைகள் செய்யப்பட்டுள்ளன.

இதுபோல கடந்த 8 மாதங்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிந்தையில் உதித்த 'சுய சான்று' திட்டத்தின் பலனை இப்போது ஏராளமான மக்கள் பெற்றுவருகிறார்கள். இந்த திட்டத்தின் கீழ் 2,500 சதுர அடி கொண்ட பரப்பளவில் 3,500 சதுர அடி கொண்ட கட்டிடத்தை கட்ட அரசு அலுவலகங்களுக்கு படையெடுத்து சென்று, அதிகாரிகளை சந்திக்க கால் கடுக்க நின்று கொண்டிருக்க வேண்டிய தேவை இப்போது இல்லை. சுயமாக எல்லா சான்றுகளையும் ஆன்லைனில் தாக்கல் செய்யும் பட்சத்தில் உடனே அனுமதி கிடைத்துவிடுகிறது. கடந்த 8 மாதங்களில் மட்டும் 71,128 பேர் தாங்களாகவே ஆன்லைனில் சுய சான்றை பதிவு செய்து உடனடியாக கட்டிட அனுமதியை பெற்றிருக்கிறார்கள். அமைச்சர் முத்துசாமி, நகர ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் மற்றும் அதிகாரிகள் இவ்வாறு சுய சான்றிதழ் மூலம் கட்டிட அனுமதி பெறும் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திவருகிறார்கள்.

இப்போது சுய சான்றிதழ் முறையில் இணையதளம் மற்றும் 2 தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் சுய சான்றிதழ் மூலம் 500 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்படும் குடிசை தொழில் மற்றும் பசுமை வகை தொழிற்சாலைகளுக்கான கட்டிட அனுமதி இணையதளம் வாயிலாக உடனடியாக வழங்கப்படும் என்று வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு சிறு தொழிற்சாலைகளை கட்டுபவர்களுக்கு பெரும் பயனளிக்கும். மொத்தத்தில் கட்டிட வரைபட அனுமதியோ, வரன்முறை வாங்குவதோ மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story