பறந்து வந்த முருங்கைக்காய்!


பறந்து வந்த முருங்கைக்காய்!
x

சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு இந்த முருங்கைக்காய் கொண்டுவரப்படுகிறது.

நாட்டில் இப்போது பணவீக்கம் 6.2 சதவீதமாக இருக்கிறது. பணவீக்கத்தின் அடையாளமே விலைவாசி உயர்வுதான். இப்போது நிலவும் விலைவாசி உயர்வால் சாதாரண ஏழை-எளிய மக்கள் மட்டுமல்லாமல், நடுத்தர மக்கள் கூட வாழ்க்கை சக்கரத்தை சுழல வைக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். பணவீக்கத்தின் முக்கிய காரணம் காய்கறி விலை உயர்வுதான் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள் எல்லாவற்றின் விலையும் உச்சத்துக்கு போயிருப்பது போல பூண்டு விலையும் எட்டாத உயரத்துக்கு போய்விட்டது.

கிலோ ரூ.100 என்று இருந்த பூண்டு விலை ரூ.400-ஐ தாண்டி சென்றுவிட்டது. ரூ.15-க்கு விற்ற பெரிய வெங்காயத்தின் விலை இப்போது ரூ.100-ஐ தொட்டுவிட்டது. எல்லா காய்கறிகளின் விலையும் உயர்ந்துவிட்டது என்றாலும் முருங்கைக்காய் விலை வாங்க முடியாத அளவுக்கு சென்றுவிட்டது. சென்னையில் நேற்று ஒரு முருங்கைக்காய் விலை ரூ.40-க்கு எகிறிவிட்டது. கடந்த வாரத்துக்கு முன்பு இதைவிட மிக அதிகமாக இருந்தது. இப்போதெல்லாம் ஓட்டல்களில் மட்டுமல்லாமல் வீடுகளில் கூட முருங்கைக்காய் சாம்பார், முருங்கைக்காய் கூட்டெல்லாம் பார்க்கமுடியாத உணவு பொருளாகிவிட்டது.

இவ்வளவுக்கும் நாட்டிலேயே முருங்கைக்காய் விளைச்சலில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது. மொத்த விளைச்சலில் 24 சதவீத பங்களிப்பினை தமிழகம் வழங்குகிறது. தமிழ்நாட்டில் கடந்த நிதி ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்து 472 ஹெக்டேர் நிலப்பரப்பில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டது. இதில் 8 லட்சத்து 41 ஆயிரத்து 807 டன் விளைச்சல் காணப்பட்டது. பல வீடுகளில் அவர்கள் தேவைக்காக வீட்டின் அருகிலேயே ஓரிரு முருங்கை மரங்களை வளர்ப்பது வழக்கமாக உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் ஆண்டிப்பட்டி, உடன்குடி, திசையன்விளை போன்ற இடங்களில் முருங்கைக்காய் சாகுபடி அதிக அளவில் செய்யப்படுகிறது. முருங்கைக்காய் சாகுபடியில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தாலும், இப்போது பருவநிலை காரணமாக விளைச்சல் இல்லை. டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு காரணமாக முருங்கை மரத்தில் பூக்கள் பூப்பதில்லை. இந்த கால கட்டத்தில்தான் விளைச்சல் குறைந்து விலை அதிகரித்துள்ளது. இந்த மாதங்களில் தமிழ்நாட்டில் தற்போது வரத்து அடியோடு நின்றுவிட்டதால் குஜராத் மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்துதான் முருங்கைக்காய் கொண்டு வரப்படுகிறது.

ரெயில்களிலும், லாரிகளிலும் அங்கு இருந்து முருங்கைக்காய் கொண்டு வரப்பட்ட நிலையில், இப்போது விமானத்திலும் கொண்டு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் ஒரு கிலோ முருங்கைக்காய் விலை கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரை விற்பனை ஆகிறது. எனவே தான் தமிழக வியாபாரிகள் அந்த மாநிலங்களில் இருந்து விமானம் மூலம் உடனடியாக கொண்டு வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். இது தவிர்க்க முடியாதது ஆகும்.

சென்னை, கோவை விமான நிலையங்களுக்கு இந்த முருங்கைக்காய் கொண்டுவரப்படுகிறது. முருங்கை இலை சூப், பவுடர், முருங்கை இலை மாத்திரை, முருங்கை இலை டீ என முருங்கை சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் வெளிநாடுகளில் நல்ல கிராக்கி இருப்பதால் ஏற்றுமதிக்கு நல்ல வாய்ப்பாக அமைகிறது. மேலும் நட்டு 6 மாதத்தில் அமோக விளைச்சல் காணும் முருங்கைக்காய் சாகுபடிக்கேற்ற தட்பவெப்ப, மண்வளம் இருப்பதாலும் குறைந்த அளவே நீர் தேவை இருப்பதாலும் முருங்கை சாகுபடியை தமிழக அரசின் தோட்டக்கலைத்துறை தீவிரப்படுத்தவேண்டும். குறைந்த செலவில் விவசாயிகளுக்கும் நிறைய வருவாய் கிடைக்கும்.


Next Story