இந்தியாவில் தயாரிப்போம்; உலகுக்காக தயாரிப்போம்!


Lets make in India; lets make for the world!
x

இப்போது இந்திய ராணுவத்துக்காக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் பணி குஜராத்தில் தொடங்கிவிட்டது.

சென்னை,

'குண்டூசி முதல் விமானம் வரை அனைத்து பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிப்போம்; உலகுக்காக தயாரிப்போம்' என்பது மத்திய அரசாங்கத்தின் லட்சிய முழக்கமாக இருக்கிறது. அந்த வகையில், இப்போது இந்திய ராணுவத்துக்காக போக்குவரத்து விமானங்கள் தயாரிக்கும் பணி குஜராத்தில் தொடங்கிவிட்டது. இதுவரை இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவ்ரோ விமானங்கள் இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. இந்த விமானங்களுக்கு பதிலாக நவீன ரக ஏர்பஸ் விமானங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சி-295 ரகத்திலான 56 விமானங்களை ரூ.21,935 கோடி செலவில் வாங்குவதற்கு ஸ்பெயின் நாட்டிலுள்ள ஏர்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, 16 விமானங்களை பறக்கும் நிலையிலேயே முழுமையாக தயாரித்து இந்தியாவுக்கு வழங்குவதாகவும், மீதமுள்ள 40 விமானங்களை இந்தியாவிலேயே தயாரித்து கொடுப்பதாகவும் ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த விமானங்களை தயாரித்து வழங்கும் பணி டாடா நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் மரணமடைந்த டாடா சன்ஸ் குழும தலைவர் ரத்தன் டாடா இதற்காக அதிக ஆர்வம் காட்டிவந்தார். அவரது முயற்சியின் பலனாகத்தான் டாடா நிறுவனத்துக்கு 40 விமானங்களை தயாரிக்கும் ஒப்பந்தம் கிடைத்தது.

இவை அனைத்தும் ராணுவ பயன்பாட்டுக்கான போக்குவரத்து விமானங்களாகும். இந்த 40 விமானங்களை தயாரிக்க குஜராத் மாநிலம் வதோதராவில் ஒரு தொழிற்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பிரதமர் நரேந்திரமோடி அடிக்கல் நாட்டினார். நாட்டின் முதல் ராணுவ விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலை இதுதான். இப்போது கட்டுமான பணிகள் அசுர வேகத்தில் முடிந்து உற்பத்திக்கு தயாராக இருக்கும் நிலையில், இந்தியா வந்திருந்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்சும், பிரதமர் நரேந்திரமோடியும் இணைந்து இந்த தொழிற்சாலையை திறந்து வைத்தனர்.

உடனடியாக விமான உற்பத்தியும் இங்கு தொடங்கிவிட்டது. '2026-ல் முதல் விமானம் இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேவந்து பறக்கத்தொடங்கும்' என்று ஸ்பெயின் பிரதமர் கூறியிருக்கிறார். விமானத்துக்கு தேவையான முக்கிய உதிரிபாகங்கள் தயாரிக்கும் பணி ஐதராபாத்தில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. விமானத்தை உற்பத்தி செய்ய 40 ஆயிரம் உதிரிபாகங்கள் தேவை. இதில் 13 ஆயிரம் உதிரி பாகங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான புத்தாக்க நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்திலும், தமிழ்நாட்டிலும் ராணுவத்தில் தொழில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

ஆக, இந்த தொழிற்சாலைக்கு தேவையான அனைத்து உதிரிபாகங்களும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, முழுக்க.. முழுக்க.. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட விமானமாக இது திகழும் என்பதில் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை. நமது தேவைக்கு போக உலகுக்காக தயாரிப்போம் என்ற லட்சியத்துக்கேற்ப, உலகில் பல நாடுகளுக்கு சி-295 விமானங்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது. இதுபோல, இந்தியாவில் பயணிகள் விமான தேவை அதிகளவில் இருக்கிறது. அதையும் இந்த தொழிற்சாலையிலேயே தயாரிக்கும் திட்டம் இருக்கிறது. குஜராத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலையில் இப்போதே 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 27 ஆயிரம் உதிரிபாகங்களையும் இங்கேயே தயாரித்தால் கூடுதலாக பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்கான தொழிற்சாலைகளை தமிழ்நாட்டிலுள்ள ராணுவ தளவாட வழித்தடத்தில் தொடங்கவேண்டும். உதிரி பாகங்களை தயாரிக்கும் பல புத்தாக்க நிறுவனங்களையும் தமிழ்நாட்டில் தொடங்க வழிவகை செய்யப்படவேண்டும்.


Next Story