வரலாறு காணாத சேதத்துக்கு உடனடி நிவாரணம்!


Immediate Relief for unprecedented damage!
x

‘பெஞ்ஜல்’ புயல் கனமழையுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கோர தாண்டவம் ஆடி பல மாவட்டங்களை சூறையாடிவிட்டது

சென்னை,

யானை போல் அசைந்தாடி மெதுவாக வந்த 'பெஞ்ஜல்' புயல் கனமழையுடன் தனது ஆட்டத்தை முடித்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதம்பிடித்த யானை போல் வெகுண்டெழுந்து கோர தாண்டவம் ஆடி பல மாவட்டங்களை சூறையாடிவிட்டது. தொடக்கம் முதலே புயல் எங்கு கரையை கடக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாத நிலையில், மாமல்லபுரம் - காரைக்கால் இடையே புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இதனால், புதுச்சேரியிலும், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் வரலாறு காணாத மழை கொட்டித்தீர்த்தது. புயல் வலுவிழந்து உள்மாவட்டங்களை நோக்கி நகர்ந்து சென்றதால், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

"கடந்த 50 ஆண்டுகளில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த 'பெஞ்ஜல்' புயல் போல் மிகவும் மெதுவாக நகர்ந்த புயல் எதுவும் இல்லை" என்று வானிலை நிபுணர்களே கூறுகிறார்கள். பொதுவாக ஒரு புயல் தினமும் 10 முதல் 12 கி.மீ. வேகத்தில் நகர்ந்தால், 200 முதல் 300 கி.மீ. தூரத்தை கடந்து செல்ல முடியும். ஆனால், பெஞ்ஜல் புயல் கடைசியாக 3 கி.மீ. வேகத்துக்கு குறைந்து, 500 கி.மீ. தூரத்தை 5 நாட்களாக கடந்திருக்கிறது. பொதுவாக, காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி 3-வது நாளில் புயலாக வலுப்பெற்று மழை கொட்டும். ஆனால், கடந்த மாதம் 25-ந்தேதி வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி 4 நாட்களுக்கு பிறகுதான் பெஞ்ஜல் புயலாக மாறியது. 14 மாவட்டங்களில் கனமழையை பொழிந்து பேரழிவை ஏற்படுத்தியது.

இந்த மழையினால் திருவண்ணாமலையில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் மண்ணுக்குள் புதைந்ததால் 7 பேர் உயிரோடு சமாதியானார்கள். இந்த புயல் சேதத்துக்காக ரூ.2 ஆயிரம் கோடி நிவாரண உதவிவேண்டும், மத்திய குழுவை உடனடியாக அனுப்பவேண்டும் என்று பிரதமருக்கு நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நேற்று காலையிலேயே பிரதமர் நரேந்திரமோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினோடு தொடர்பு கொண்டு புயல் சேத விவரங்களை கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்பை திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் அவரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். மேலும், புயல் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கும் வகையில், விரிவான திட்ட மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக மத்திய நிபுணர் குழுவை அனுப்பவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார். குறிப்பாக, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மேல் மழை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் நிவாரணமாக

ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இனி பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய குழுவும் உடனடியாக வந்தால்தான் பாதிப்புகளின் கோரத்தை கண்கூடாக பார்க்க முடியும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு தமிழ்நாடு கேட்டது ரூ.38 ஆயிரம் கோடி, ஆனால் மத்திய அரசாங்கம் கொடுத்தது ரூ.276 கோடிதான். அதுபோல இல்லாமல், பெஞ்ஜல் புயல் சேதத்தை முழுமையாக கணக்கிட்டு உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசாங்கம் காலத்தே வழங்க வேண்டும்.


Next Story