தை பிறந்தால் வழி பிறக்கும் !


தை பிறந்தால் வழி பிறக்கும் !
x

புதுப்பானையில் பச்சரிசி இட்டு, வெல்லமும் சேர்த்து பொங்கலிடும்போது, பானையில் இருந்து பொங்கல் பொங்கி வழிவதுபோல, ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும் பொங்கி வழியும்.

தமிழ் சமுதாயத்தில், குறிப்பாக விவசாய குடும்பங்களில் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளாக 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று சொல்வார்கள். 1958-ம் ஆண்டு 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற திரைப்படம் வெளிவந்தது. அதில் கவிஞர் மருதகாசி, 'தை பிறந்தால் வழி பிறக்கும் தங்கமே தங்கம், தங்கச்சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம், ஆடியிலே விதை விதைச்சோம் தங்கமே தங்கம், ஐப்பசியிலே களை எடுத்தோம் தங்கமே தங்கம், கார்த்திகையிலே கதிராச்சு தங்கமே தங்கம், கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்...' என்று வரிகள் வரும் பாடலை எழுதியிருந்தார்.

இது விவசாயத்தையும், தைப்பொங்கலின் சிறப்பையும் அப்படியே இன்றும் படம்பிடித்து காட்டுகிறது. இந்தப்பாடலில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆடியிலே விதை விதைத்து இப்போது அறுவடை கண்டிருக்கும் விவசாயிகளின் வாழ்வில் தைத்திருநாள் வளம்கொண்டு வரும் நாளாக இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ஒரு தனிச்சிறப்புண்டு. இப்பண்டிகையை கொண்டாட சாதி-மதம் என்ற பேதம் கிடையாது. அனைவருக்கும் பொதுவான, அதிலும் தமிழர்களுக்கே உரித்தான பண்டிகையாகும். நாம் கொண்டாடும் மற்ற அனைத்து பண்டிகைகளும் பிறந்த இடம் தமிழ்நாடு இல்லை. ஆனால், பொங்கல் பண்டிகை மட்டும்தான் நமது தாய் பண்டிகை என்று கொண்டாடும் வகையில் தமிழ்நாட்டில் தோன்றியது.

சங்க இலக்கியங்களிலேயே இத்திருநாள் குறிப்பிடப்பட்டிருப்பதால், சரித்திர காலம்தொட்டே இந்த நல்லநாள் கொண்டாடப்பட்டு வருவது புலனாகிறது. தை பொங்கலுக்கு பல சிறப்புகள் உண்டு. இது 4 நாட்கள் கொண்டாடப்படும் பண்டிகையாகும். முதல் நாள் போகிப்பண்டிகை. 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற தார்ப்பரியத்தின்படி வீட்டிலுள்ள பழைய பொருட்களையெல்லாம் கழித்து, எல்லாமே புதிதாத துலங்க வைப்பதுதான் போகிப்பண்டிகை. இதைவைத்து மற்றொரு பொருளும் கூறுவார்கள். உள்ளத்தில் உள்ள கவலைகளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு மகிழ்ச்சியை புதிதாக பிறக்கச்செய்யும் நாள் இது.

அடுத்த நாள் பொங்கல் பண்டிகை. உழைப்பின் பலனை மகிழ்வோடு கொண்டாடும் திருநாள்தான் இந்த பொன்னாள். அந்தவகையில், இன்று புதுப்பானையில் பச்சரிசி இட்டு, வெல்லமும் சேர்த்து பொங்கலிடும்போது, பானையில் இருந்து பொங்கல் பொங்கி வழிவதுபோல, இந்தாண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வளமும், செல்வமும் பொங்கி வழியும் என்பதுதான் இதன் பொருள். இந்தநாளின் கொண்டாட்டத்தில் மற்றவர்களுக்கும் வாழ்வளிக்கப்படுகிறது. பொங்கலிட வாங்கும் மண்பானைகளால் குயவர்களுக்கு வாழ்வு கிடைக்கிறது. கைத்தறி புத்தாடைகள் அணிவதால் நெசவாளர்களுக்கு வருமானம் கிடைக்கிறது. 3-வது நாள் மாட்டுப்பொங்கல். விவசாயத்துக்கு உறுதுணையாக இருக்கும் காளைகளுக்கும், பசு மாடுகளுக்கும் நன்றி மறவாத தமிழன் நன்றி தெரிவிக்கும் நாள். 4-வது நாள் காணும் பொங்கல். அந்த நாளில்தான் உற்றார்-உறவினர்களைக்கண்டு மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளும் நாள். அதுமட்டுமல்லாமல், ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகளை விளையாடி மகிழும் நாளாகும்.

இப்படி இந்த 4 நாட்கள் பண்டிகையும் 'நல்ல காலம் பிறந்தாச்சு...' என்று நம்பிக்கையோடு ஒரு ஆண்டை தொடங்கும் நாளாகும். இந்தாண்டு வளமிக்க ஆண்டாக விவசாயம் தழைக்கும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பருவமழை நன்றாக பெய்திருக்கிறது. தமிழக அரசும் விவசாய மேம்பாட்டுக்கு பல நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இயற்கை விவசாயமும் வளர்ந்து வருகிறது. பொருளாதாரமும் மேம்படுகிறது. ஆக, தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் பொங்கல் பண்டிகை இந்தாண்டு தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் பல வளத்தையும், மகிழ்ச்சியையும் பெருக்கெடுத்தோட செய்யும்.


Next Story