எத்தனை காலம்தான் இந்த நிலைமை

இந்தியாவில் 7 சகோதரிகள் மாநிலம் என்று அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இது வங்காளதேசம் மற்றும் மியான்மர் நாட்டுடன் எல்லையை பகிர்ந்துகொண்டுள்ளது. இந்த எல்லையைத்தாண்டி மியான்மரில் இருந்து சர்வசாதாரணமாக மணிப்பூருக்கு ஊடுருவி வருகிறார்கள். இதை தடுக்கவேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாகவே இருக்கிறது. மணிப்பூரில் ஏறத்தாழ 33 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இதில் பாதிக்கு மேல் சமவெளியில் வசிக்கும் மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மலைப்பகுதிகளில் குகி மற்றும் நாகா சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழ்கிறார்கள். குகி சமூகத்தினர் போல தங்களையும் பழங்குடி பட்டியலில் சேர்க்கவேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாகவே மெய்தி சமூகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளும் தங்களுக்கும் கிடைக்கவேண்டும் என்று போராடி வந்தனர். இந்த நிலையில், 2023-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ந்தேதி அந்த மாநில ஐகோர்ட்டில் மெய்தி இனத்தினரின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தீர்ப்பு வந்தது. இதைத்தொடர்ந்து மே மாதம் 3-ந்தேதி மணிப்பூரில் பழங்குடியினர் மாணவர் அமைப்பின் சார்பில் நடந்த ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே பெரும் கலவரம் வெடித்தது. அன்று தொடங்கிய இந்த மோதல் இன்றுவரை நின்றபாடில்லை.
இந்த மோதல்களில் இருதரப்பினர் மட்டுமல்லாமல், பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4,786 வீடுகள், 386 வழிபாட்டு தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தீக்கிரையாக்கப்பட்டும், சூறையாடப்பட்டும் அழிக்கப்பட்டன. பா.ஜனதா அரசாலும், முதல்-மந்திரி பைரேன் சிங்காலும் இதை கட்டுப்படுத்தமுடியவில்லை. இதற்கிடையே பைரேன் சிங் மணிப்பூர் கலவரத்தின்போது மெய்தி இன போராட்டக்காரர்கள், அரசின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயுதங்களை கொள்ளையடிக்க அனுமதித்ததாக வெளியான வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுங்கட்சியான பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
ஒருபுறம் எதிர்க்கட்சிகள், மறுபுறம் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்று இரு தரப்பினரின் எதிர்ப்பையும் சமாளிக்கமுடியாமல் 6 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் நடத்தப்படவேண்டும் என்ற விதியின் படி கடந்த 12-ந்தேதி சட்டசபை கூட்டப்படாததால் பைரேன் சிங் தன் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை கவர்னர் அஜய்குமார் பல்லாவிடம் அளித்தார். கவர்னரும், சட்டசபையை முடக்கி வைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த அளித்த பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்று, ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தினார். அதேசமயம் சட்டசபை கலைக்கப்படவில்லை. சட்டசபையின் பதவிக்காலம் 2027-ம் ஆண்டு மார்ச் வரை இருக்கிறது. எனவே புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் ஜனாதிபதி ஆட்சி விலக்கிக்கொள்ளப்படும்.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுவது இது புதிதல்ல. கடந்த 57 ஆண்டுகளில் 11-வது முறையாக இப்போது ஜனாதிபதி ஆட்சி அமலாகியிருக்கிறது. மணிப்பூரில் கலவரம் கொந்தளித்துக்கொண்டு இருக்கும் நிலையில், ஜனாதிபதி ஆட்சி காலத்திலாவது மெய்தி மற்றும் குகி ஆகிய இரு சமுதாயத்தினரையும் அழைத்து பேசி சுமுக நிலையை ஏற்படுத்த மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த கலவரங்களுக்கெல்லாம் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிற போதைப்பொருள் நடமாட்டத்தை ஜனாதிபதி ஆட்சியின் போதாவது, மத்திய போலீசார் இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கவேண்டும். பிரதமர் நரேந்திர மோடியோ, உள்துறை மந்திரி அமித்ஷாவோ நேரில் சென்று இதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.