எட்டாத உயரத்தில் முட்டை விலை


Egg prices at unreachable heights
x

மக்கள்தொகை பெருக்கத்தால், முட்டையின் தேவை உயர்ந்து, முட்டைக்கோழிகளின் வளர்ப்பு அதிகரித்துவிட்டது.

சென்னை,

கோழி முட்டை சைவமா?, அசைவமா? என்ற கேள்விக்கான விடை வெவ்வேறாக சொல்லப்பட்டாலும், அதை சாப்பிடுவதால் கிடைக்கும் சத்துக்களை யாரும் குறைத்து மதிப்பிடவில்லை. அந்தகாலத்தில் முட்டைக்காகவே வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்த்தார்கள். இப்போது, மக்கள்தொகை பெருக்கத்தால், முட்டையின் தேவை உயர்ந்து, முட்டைக்கோழிகளின் வளர்ப்பு அதிகரித்துவிட்டது.

1970-ம் ஆண்டுகளில்தான், நாமக்கல்லில் கோழிப்பண்ணைகள் தொடங்கப்பட்டன. தற்போது, நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நாமக்கல் மண்டலத்தில் மட்டும் ஏறத்தாழ 1,200 முட்டை கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு வளர்க்கப்படும்7 கோடி கோழிகள் மூலம் தினமும் 5½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அந்தவகையில் இந்தியாவில் முட்டை உற்பத்தியில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. இங்கு முதலில் கோழி முட்டைகளை எந்திரம் மூலம் குஞ்சு பொறிக்க வைக்கிறார்கள். குஞ்சு பொறித்து, 4 வாரங்களில் அது வளர்ந்து முட்டையிடத்தொடங்கும். ஒரு கோழி 320 முட்டைகள் வரை இடும். அதன்பிறகு, கறிக்கோழிக்கு அனுப்பிவிடுவார்கள். தமிழக அரசின் சத்துணவுத்திட்டத்துக்கு மட்டும் தினமும் 50 லட்சம் முட்டைகள் சப்ளை செய்யப்படுகின்றன.

வெளிநாடுகளுக்கு செய்யப்படும் ஏற்றுமதி போக, மீதமுள்ள முட்டைகள் தமிழ்நாட்டிலும், வெளிமாநிலங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு, தினமும் பண்ணைகளில் எவ்வளவு விலைக்கு ஒரு முட்டையை விற்கலாம்? என்று நிர்ணயித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டை ரூ.5.85-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது அப்போதைய உச்சபட்சமாக பார்க்கப்பட்டது. இப்போது வெளிநாடுகளுக்கு தினமும் முட்டை ஏற்றுமதி 30 லட்சம் முதல் 40 லட்சம் வரை அதிகரித்திருப்பதாலும், உள்நாட்டிலும் நுகர்வு அதிகமாக இருப்பதாலும் முட்டை கொள்முதல் விலை ரூ.5.90 ஆக உயர்ந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை ரூ.5-க்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போதைய விலை இதுவரை இல்லாத உச்சமாக பார்க்கப்படுகிறது. சில்லரை விற்பனை கடைகளில் ரூ.7-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.

முட்டை விலை இவ்வளவு உயர்வதற்கு காரணம், வடமாநிலங்களில் குளிர்காலத்தில் முட்டையின் நுகர்வு மிகவும் அதிகமாக இருக்கிறது. அங்கு குளிர் நேரங்களில் முட்டை மிக அதிகமாக சாப்பிடுவார்கள். முட்டை விலை இவ்வாறு ரூ.7-க்கு மேல் போனால், நடுத்தர மற்றும் ஏழை, எளிய குடும்பங்களில், எல்லோருக்கும் தினமும் முட்டை வாங்கிகொடுப்பது என்பது சற்று கையை கடிக்கும் செலவாக இருக்கிறது. முட்டைகூட எட்டாக்கனியாகிவிட்டது. முட்டை விலையை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. ஆனால், கோழிப்பண்ணை வைத்திருப்பவர்கள், ''கோழித்தீவனத்தின் விலை அதிகமாக இருக்கிறது. மின்சாரக் கட்டணம் அதிகம். தொழிலாளர்களுக்கு கூலி அதிகம். உற்பத்தி செலவே ரூ.5-க்கு மேல் வருகிறது'' என்கிறார்கள்.

மேலும், "வடமாநிலங்களில் உள்ள கோதுமை கிடங்குகளில், உடைந்து நொறுங்கிய கோதுமை கழிவுகளை தீவனத்துக்காக மானிய விலையில் கோழிப்பண்ணைகளுக்கு கொடுக்கலாம். கோழிப்பண்ணைகளுக்கு மின்சார கட்டணத்துக்கும், சரக்கு ரெயில் கட்டணத்துக்கும் சலுகை வழங்கவேண்டும். இதையெல்லாம் கொடுத்தால் முட்டையின் உற்பத்தி செலவு குறையும். எங்களால் குறைந்த விலைக்கு முட்டையை விற்பனை செய்யமுடியும்" என்கிறார்கள் கோழிப்பண்ணை உரிமையாளர்கள். இந்த சலுகைகளை அளித்தால், குறைந்த விலையில் முட்டை உற்பத்தி செய்வதுடன், வெளிநாடுகளுக்கும் அதிகமாக ஏற்றுமதி செய்ய வாய்ப்பாக அமையும்.


Next Story