02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...


02-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்...
x
தினத்தந்தி 2 Jan 2025 8:32 AM IST (Updated: 2 Jan 2025 9:49 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • 2 Jan 2025 10:02 AM IST

    தமிழகத்தில் 7 மாவட்டங்களில் 'ஸ்க்ரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு


    மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “'ஸ்க்ரப் டைபஸ்' என்பது ஒரு வகையான பாக்டீரியா தொற்று ஆகும். ரிக்கட்சியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள், உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும்போது அவர்களுக்கு 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் ஏற்படுகிறது.

    இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் தடிப்புகள், உடல் அரிப்பு ஆகியவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் 'ஸ்க்ரப் டைபஸ்' நோய் பரவல் அதிகளவில் காணப்படுகிறது. கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் இந்த பாதிப்பு காணப்படுகிறது.

    விவசாயிகள், புதர்மண்டிய மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் வசிப்பவர்கள், மலையேற்றத்தில் ஈடுபடுபவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு இந்த பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    எலிசா ரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு பரிசோதனைகள் மூலமாக இந்த நோயைக் கண்டறிய முடியும். 'ஸ்க்ரப் டைபஸ்' காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அசித்ரோமைசின், டாக்சிசைக்ளின் ஆகிய நோய் எதிர்ப்பு மருந்துகளை அளித்து சிகிச்சையளிக்க வேண்டும். அதன் பின்னரும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் ரத்த நாளத்தின் வழியே திரவ மருந்துகளை செலுத்தி உயர் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, இதுகுறித்து பொதுமக்களுக்கு மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று அதில் கூறப்பட்டு உள்ளது.


  • 2 Jan 2025 9:49 AM IST

    ராமநாதபுரம் அருகே அரசு பஸ்கள் மோதல்: பயணிகள் 25 பேர் படுகாயம்

    ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருகே ஆலங்குளம் என்ற இடத்தில் இரண்டு அரசு பஸ்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் இரு பஸ்களில் பயணித்த 25 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

    காயமடைந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 2 Jan 2025 9:20 AM IST

    பொங்கல் பரிசு தொகுப்பு: நாளை முதல் வீடுவீடாக டோக்கன் 

    பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்கள் நாளை (ஜனவரி 3-ம் தேதி) முதல் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. தொகுப்பு பெறும் நாள், நேரம் குறிப்பிட்டு வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்படும் என்றும் டோக்கனில் குறிப்பிட்ட நாளில் சென்று சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் தொகுப்பை ரேஷன் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒரேநேரத்தில் ரேஷன் கடைகளில் குவிவதை தடுக்க டோக்கனில் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று வழங்க உள்ளனர். நியாயவிலைக் கடையில் காலை 100 பேர், மாலையில் 100 பேர் பொங்கல் பரிசு தொகுப்பை பெறும் வகையில் டோக்கன் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 2 Jan 2025 9:13 AM IST

    மதுரை திருமங்கலத்தில் தனியார் பஸ் சாலை தடுப்பில் மோதி விபத்து: 10க்கும் மேற்பட்டோர் காயம்


    மதுரை திருமங்கலத்தில் தனியார் பஸ் ஒன்று சாலை தடுப்பில் மோதியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

    விபத்தில் காயமடைந்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

  • 2 Jan 2025 9:04 AM IST

    ராமநாதபுரம் அருகே ஆம்புலன்சும், லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பேர் பலி

    ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே லாரியின் பின்புறத்தில் ஆம்புலன்ஸ் மோதிய விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    உடல்நிலை பாதிக்கப்பட்ட வரிசை கனி என்பவரை ஆம்புலன்சில் அழைத்துச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த வரிசை கனி, மகள் அனீஸ் பாத்திமா, மருமகன் சகுபர் சாதிக் ஆகியோர் இந்த சம்பவத்தில் பலியானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 2 Jan 2025 9:01 AM IST

    நாளை தொடங்குகிறது 'ஜெய் பாபு, ஜெய் பீம்' பேரணி - காங்கிரஸ் அறிவிப்பு

    காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், “முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீது வைத்துள்ள ஆழ்ந்த மரியாதை காரணமாக, காங்கிரஸ் காரிய கமிட்டி தீர்மானத்தை அமல்படுத்துவது ஒரு வாரத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. அவர் இல்லை என்பதை உணர நீண்ட காலமாகும். இருப்பினும், ‘ஜெய் பாபு, ஜெய் பீம், ஜெய் அரசியல் சாசனம்’ பிரசார பேரணி, 3-ந் தேதி தொடங்குகிறது.

    ஜனவரி 26-ந் தேதி, சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த மோவ் நகரில் நடக்கும் பொதுக்கூட்டத்துடன் இந்த பிரசாரம் முடிவடையும். அந்த நாள், இந்திய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது, குடியரசு தினம் ஆகியவற்றின் 75-வது ஆண்டு நிறைவுநாள் ஆகும். 3-ந் தேதி முதல் 26-ந் தேதிவரை, நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டம், மாவட்டம் மற்றும் மாநிலங்களில் பேரணி, பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறும்” என்று அவர் கூறினார்.

  • 2 Jan 2025 8:58 AM IST

    3-வது டி20: குசல் பெரேரா அதிரடி சதம்.. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இலங்கை


    முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன நிசங்கா 14 ரன்களிலும், குசல் மென்டிஸ் 22 ரன்களும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கிய குசல் பெரேரா அதிரடியில் பட்டையை கிளப்ப ஸ்கோர் மளமளவென எகிறியது. நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்து வாங்கிய அவர் 46 பந்துகளில் 101 ரன்கள் குவித்து அசத்தினார். அவருடன் கை கோர்த்த கேப்டன் அசலன்கா 24 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.

    இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்துள்ளது. இதனையடுத்து 219 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.


  • 2 Jan 2025 8:37 AM IST

    செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


    சென்னையில் உள்ள செம்மொழி பூங்காவில் தமிழக தோட்டக்கலைத் துறை சார்பில் 4-வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மலர் கண்காட்சியை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

    ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவில் சுமார் 800 வகையான வித, விதமான செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. அரிய வகை மரங்களும் உள்ளன.


  • 2 Jan 2025 8:35 AM IST

    அரையாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறப்பு


    தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான அரையாண்டு மற்றும் 2-ம் பருவத் தேர்வுகளைத் தொடர்ந்து, டிசம்பர் 24- ந்தேதி முதல் ஜனவரி 1-ந்தேதி வரை அரையாண்டு விடுமுறை விடப்பட்டது. அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, பள்ளிகள் இன்று (வியாழக்கிழமை) மீண்டும் திறக்கப்பட உள்ளன.

    'பெஞ்ஜல்' புயல் தாக்கத்தால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நடத்தப்பட இருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில், அரையாண்டு தேர்வுகள் இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.




Next Story