வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு - 2வது நாளாக தொடரும் மீட்புப்பணி
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் மீட்புப்பணி 2வது நாளாக நடைபெற்று வருகிறது.
திருவனந்தபுரம்,
Live Updates
- 31 July 2024 6:54 PM IST
அமித்ஷா குற்றச்சாட்டு - பினராயி விஜயன் மறுப்பு
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், “இந்திய வானிலை ஆய்வு மையம் வயநாடு மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. . இருப்பினும், உண்மையான மழை இந்த கணிப்புகளை விட அதிகமாக உள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே வயநாடு மாவட்டத்துக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றம்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
- 31 July 2024 6:49 PM IST
வயநாடு சூரல்மலை பகுதியில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை 2-வது நாளாக மீட்கும் ராணுவ வீரர்கள்...
- 31 July 2024 6:34 PM IST
வயநாடு நிலச்சரிவு துயரம்:மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்ட 38 உடல்கள்
வயநாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மலப்புரம் மாவட்டத்தில் மீட்கப்பட்டுள்ளது.
நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட 38 பேரின் உடல்கள் மேப்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 31 July 2024 5:30 PM IST
வயநாடு நிலச்சரிவில் இருந்து இதுவரை 1,386 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் - பினராயி விஜயன்
செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், “அட்டமலை, சூரல்மலையில் முழுவீச்சில் மீட்புப்பணிகள், நிவாரணப்பணிகள் நடைபெறுகின்றன. உணவுப்பொருட்களை கொண்டு செல்ல கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது. ஒவ்வொருவராக செல்லும் வகையில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. LLH, M17 ஆகிய இரண்டு ஹெலிகாப்டர்கள் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளன. கடலோர காவல் படையினர் உள்பட 1,257 பேர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
17 லாரிகள் மூலம் தேவையான உதவிப்பொருட்கள் சூரல்மலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்களின் உதவியுடன் பிரேத பரிசோதனை வேகமாக நடைபெறுகிறது.
கடந்த இரண்டு நாட்களில் 1,592 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் பலர் வரும் மணிநேரங்களில் பாதுகாப்பாக வெளியேற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், நிலச்சரிவில் சிக்கித் தவித்த 1,386 பேர் மீட்கப்பட்டு 7 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 201 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி 191 பேர் காணாமல்போய் உள்ளனர்.
மீட்கப்பட்ட 144 சடலங்களில் 76 ஆண்கள் மற்றும் 64 பெண்களும் உள்ளனர். மீட்கப்பட்ட சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.பாதிக்கப்பட்ட மலைப்பகுதிகளில் மீட்பு குழுவினர் செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மந்திரிகள் முகாமிட்டுள்ளனர். மருத்துவ முகாம்களில் கூடுதல் டாக்டர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். சூரல் மலை பகுதியில் மின்விநியோகத்திற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. உறவுகளை இழந்தவர்களை மனரீதியாக தேற்றவேண்டியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.
- 31 July 2024 5:29 PM IST
மலப்புரம் மாவட்டத்தில் 38 உடல்கள் மீட்பு
சூரல்மலை நிலச்சரிவின்போது ஆற்றுவெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் பகுதியில் சாலியாறு ஆற்றில் இருந்து 38 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் மேம்பாடிக்கு கொண்டுவரப்படுகின்றன. 38 பேரின் உடல்களை உறவினர்கள் அடையாளம் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- 31 July 2024 4:08 PM IST
கேரளாவில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
கேரள மாநிலத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம்,கொல்லம், தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம்,இடுக்கி, திருச்சூர், பாலக்காட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 31 July 2024 3:51 PM IST
கோழிக்கோடு மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட 250 கிலோ உணவு பொருட்கள் மற்றும் 100 குடிநீர் பாட்டில்கள் நிலச்சரிவால் சேதமடைந்த சூரல்மலை, முண்டக்கை பகுதிகளுக்கு ஹெலிகாப்டர் மூலம் இந்திய விமானப்படை விநியோகித்தது.
- 31 July 2024 3:29 PM IST
வயநாடு நிலச்சரிவு: பேரிடரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 200 ஆக அதிகரிப்பு
நேற்று முன்தினம் இரவு முதல் வயநாடு மாவட்டத்தில் முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனைத்தொடர்ந்து வயநாட்டில் அடுத்தடுத்து 3 நிலச்சரிவுகள் ஏற்பட்டது. இந்த இரு நிலச்சரிவில் சுமார் 500 வீடுகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர்.
வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 2வது நாளாக மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இதுவரை நிலச்சரிவில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், பலியானோர் எண்ணிக்கை தற்போது 200 ஆக அதிகரித்துள்ளது.
94 சடலங்கள் அடையாளம் காணப்பட்டு பிரேத பரிசோதனைக்கு பின், இதுவரை 64 சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்னும் 225 பேர் குறித்த விவரங்கள் தெரியாததால் தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. மேலும் 400க்கும் மேற்பட்ட வீடுகளில் தற்போது 40 வீடுகள் மட்டுமே எஞ்சியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
பலர் மாயமாகி உள்ளநிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- 31 July 2024 2:34 PM IST
வயநாடு துயரம்: நிவாரண உதவிகளை வழங்க கேரள முதல்-மந்திரி வேண்டுகோள்
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், “வயநாடு துயரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்க விரும்புவோர் வழங்கலாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-மந்திரி நிவாரண நிதி மூலம் அரசு உதவிகளை செய்யும்.
வயநாடு பேரிடருக்காக முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு பணம் செலுத்த வேண்டிய வங்கிக் கணக்கு எண்: Account No:67319948232, SBI, City branch, Thiruvananthapuram; IFSC: SBIN0070028.
நிவாரண உதவியாக பொருட்களை வழங்குவோர் 1077 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம். உபயோகப்படுத்திய பழைய பொருட்களை கொண்டு வந்தால் அவை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது” என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தார்.