வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
வயநாடு,
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296-ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் சேறும், சகதியும் நிறைந்து இருப்பதால், மீட்பு பணியில் பெரும் சவால் இருந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற உள்ளது. சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன.
Live Updates
- 1 Aug 2024 3:49 PM IST
500 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு - அதிர்ச்சி தகவல்
முண்டகை பகுதியில் 500 பேர் மண்ணில் புதைந்திருக்க வாய்ப்பு உள்ளதாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் ஒருவர் தெரிவித்துள்ளார். முண்டகை பகுதியில் 400 குடும்பங்கள் இருந்துள்ளதாகவும் முண்டகை பகுதியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
- 1 Aug 2024 1:20 PM IST
நிலச்சரிவு பாதித்த பகுதிக்கு நேரில் வர வேண்டாம் என்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். இறந்தோரின் உடல்களை பெறுவதற்கு குடும்பத்தில் ஒருவர் மட்டும் வந்தால் போதும் என்றும் நிலச்சரிவில் இழந்த அனைத்து சான்றிதழ்களையும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பினராயி விஜயன் கூறியுள்ளார்.
- 1 Aug 2024 12:26 PM IST
வயநாடு நிலச்சரிவு: குழந்தைகளின் சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைப்பு
முண்டக்கை, சூரல்மலை பகுதிகளில் மீட்கப்பட்ட குழந்தைகளின் சடலங்கள், அங்குள்ள அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்கள் உதவியுடன் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.
குழந்தைகளின் பெற்றோர் நிலை என்னவென்று தெரியாத சூழலில், சடலங்களை அடையாளம் காண ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
- 1 Aug 2024 12:20 PM IST
கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் தொடங்கியது. வயநாடு நிலச்சரிவு விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களுடன் பினராயி விஜயன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
- 1 Aug 2024 12:01 PM IST
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய பகுதிகளை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
- 1 Aug 2024 11:32 AM IST
வயநாட்டில் அமைச்சர் வீணா ஜார்ஜ்: பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல்
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டு முகாம்களில் இருக்கும் மக்களை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேரில் சந்தித்தார். முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த அவர், அவர்களின் வேதனையில் பங்கெடுத்து கொள்வதாக தெரிவித்தார். அவரிடம் இருந்ததை எல்லாம் இழந்து விட்டதாக அங்கிருந்த மக்கள் வேதனை தெரிவித்தனர். இருந்தபோதும் ஆற்றுப்படுத்த முடியாதவர்களை ஆரத்தழுவி அமைச்சர் ஆறுதல் கூறினார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வீணா ஜார்ஜ் , “கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வயநாட்டில் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்” என்று கூறினார். மேலும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் அறிக்கை துரதிருஷ்டவசமானது என்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்திடம் அனைத்து தரவுகளும் உள்ளன என்றும் அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.
- 1 Aug 2024 11:17 AM IST
சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம்: இறுதிகட்டத்தை எட்டியது
முண்டகை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முண்டகையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சூரல்மலை- முண்டகை இடையே ராணுவத்தினர் அமைக்கும் இரும்பு பாலம் தயாராகி வந்தது.
இந்நிலையில் இரும்பு பாலம் அமைக்கும் பணி இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் என்.டி.ஆர்.எப். மற்றும் முப்படைகளும் துரிதமான மீட்பு பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
- 1 Aug 2024 11:15 AM IST
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்ணூர் வந்தடைந்தனர். அங்கிருந்து சாலை வழியாக வயநாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
- 1 Aug 2024 11:08 AM IST
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 3-வது நாளாக நீடித்து வருகிறது. இன்னும் 240 பேரை காணாததால் ராணுவம் தலைமையிலான மீட்புக் குழுவினர் முழு வீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- 1 Aug 2024 10:38 AM IST
நேற்றிரவு பெய்த கனமழை மற்றும் வெளிச்சமின்மை காரணமாக மீட்புப் பணிகளை தற்காலிகமாக ராணுவ வீரர்கள் நிறுத்தினர்.இருப்பினும் முண்டக்கைக்கு ஆற்றை கடந்து செல்வதற்கான தற்காலிக பாலத்தை அமைக்கும் பணியை மட்டும் விடிய விடிய தொடர்ந்தனர்.
தற்போது தற்காலிக பாலம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஜேசிபி வாகனங்கள் நிலச்சரிவு நடந்த பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.ராணுவ வீரர்களும், மீட்புப் படையினரும் கனரக வாகனங்களின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையே, கேரள முதல் மந்திரி பினராயி விஜயன், வயநாடு எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று நிலச்சரிவு பகுதிகளை பார்வையிடுகின்றனர்.