வாரவிடுமுறை: பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்


வாரவிடுமுறை: பழனி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள்
x
தினத்தந்தி 14 April 2025 2:30 AM IST (Updated: 14 April 2025 2:30 AM IST)
t-max-icont-min-icon

பழனி முருகன் கோவிலில் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பழனி,

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். திருவிழா, விசேஷ நாட்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து முருகப்பெருமானை தரிசனம் செய்ய வந்த வண்ணம் உள்ளனர்.

இதில் காவடி குழுவோடு வரும் பக்தர்களில் பலர் மயில்காவடி, இளநீர்காவடி, பால்காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். பங்குனி உத்திர திருவிழா இன்று (திங்கட்கிழமை) நிறைவு பெறுகிறது. மேலும் நேற்று வாரவிடுமுறை என்பதால் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதேபோல் தீர்த்தக்காவடி எடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

குறிப்பாக கேரளா, கர்நாடகா போன்ற வெளிமாநில பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது. நேற்று பக்தர்கள் வருகை அதிகரிப்பால் பழனி கோவிலுக்கு செல்லும் படிப்பாதை, ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் மற்றும் தரிசன வழிகள், அன்னதானக்கூடம், வெளிப்பிரகாரம் ஆகிய இடங்களில் கூட்டம் அதிகம் காணப் பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் வரை பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

இதனிடையே நேற்று காலை சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்த பக்தர்கள் பறவைக் காவடி எடுத்து பழனியில் கிரிவலம் சென்றனர். இதற்காக கிரேன் எந்திரத்தில் இருந்து பறவை காவடியில் தொங்கியபடி சென்றனர். இதை தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்தனர்.

1 More update

Next Story