விநாயகரின் 'ஏக விம்சதி' வடிவங்களும் சிறப்புகளும்


விநாயகரின் ‘ஏக விம்சதி’ வடிவங்களும் சிறப்புகளும்
x
தினத்தந்தி 1 Sep 2024 8:50 AM GMT (Updated: 1 Sep 2024 11:07 AM GMT)

செந்நிற மேனியுடன் செம்பட்டாடை உடுத்தி காட்சியளிக்கிறார் ஏகாட்ச கணபதி.

விநாயகர் பல்வேறு உருவங்களில், பல்வேறு பெயர்களில் காட்சி தருவதை அறிவோம். விநாயகரின் ஒவ்வொரு வடிவமும் அவருடைய ஆளுமையின் வெவ்வேறு அம்சங்கள் மற்றும் குறிப்பிட்ட குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது. கணேச புராணத்தில், விநாயகர் வகைகள் 32 ஆக பிரித்து கூறப்பட்டுள்ளது. இதில் முதல் பதினாறு வகைகள் 'ஷோடச கணபதி' என்றும், இரண்டாவது பதினாறு வகைகள் 'ஏக விம்சதி' என்றும் பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் முதல் ஷோடச கணபதி விநாயகர்களின் சிறப்புகளை ஏற்கனவே பார்த்தோம். இன்று 'ஏக விம்சதி' விநாயகர்களின் சிறப்புகளை பார்ப்போம்.

ஏகாட்சர கணபதி

செந்நிற மேனியுடன் செம்பட்டாடை உடுத்தி காட்சியளிக்கிறார் ஏகாட்ச கணபதி. இவர் செம்மலர் மாலையை அணிந்து, பெருச்சாளி வாகனத்தின் மீது பத்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மூன்று கண்களும், முடியில் பிறைச்சந்திரனை சூடியும் இருப்பார்.

வர கணபதி

சிவந்த திருமேனியை உடைய வர கணபதி, தனது நான்கு கரங்களில் பாசம், அங்குசம், அமுதக்கிண்ணம் மற்றும் கொடியை தாங்கி இருப்பார். பிறை சூடிய இவருக்கு மூன்று நேத்திரங்கள் உண்டு.

திரயாக்ஷர கணபதி

பொன்னிற மேனியில் இருக்கும் திரயாக்ஷர கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றை தனது நான்கு கரங்களிலும், மோதகத்தை தும்பிக்கையிலும் தாங்கியிருக்கிறார்.

சிப்ரபிரசாத கணபதி

பெரிய வயிற்றினை கொண்ட சிப்ரபிரசாத கணபதி, ஆபரணங்களை சூடி, திருக்கரங்களில், பாசம், அங்குசம், தாமரை, தர்ப்பை ஆகியவற்றை ஏந்தியதோடு, ஒரு கரத்தில் ஹஸ்த முத்திரையையும், துதிக்கையில் மாதுளம் பழத்தையும் கொண்டவர்.

ஹரித்ரா கணபதி

மஞ்சள் நிறத்தில் இருக்கும் ஹரித்ரா கணபதி, பாசம், அங்குசம், தந்தம், மோதகம் ஆகியவற்றை, 4 திருக்கரங்களில் ஏந்தி இருப்பார்.

ஏகதந்த கணபதி

நீல நிற மேனியான ஏகதந்த கணபதி பெரிய வயிறு கொண்டிருப்பார். கோடரி, அட்சமாலை, தந்தம், லட்டு ஆகியவற்றை, நான்கு திருக்கரங்களில் ஏந்தி காணப்படுகிறார்.

சிருஷ்டி கணபதி

சிவந்த மேனியுடன் இருக்கும் சிருஷ்டி கண்பதி தன் 4 கரங்களில் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைத் ஏந்தியவர். பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து காட்சி கொடுக்கிறார்.

உத்தண்ட கணபதி

தனது பத்து திருக்கரங்களில் பாசம், நீல புஷ்பம், தாமரை, தந்தம், கரும்பு வில், கதை, ரத்ன கலசம், நெற்கதிர், மாதுளம் பழம், மாலை ஆகியவற்ற வைத்திருப்பார். இடது தொடையில், பச்சை நிற மேனி தேவியை ஏற்றிருப்பவர்.

ரணமோசன கணபதி

வெண்பளிங்கு மேனியுடன் இருக்கும் ரணமோசன கணபதி, செந்நிறப் பட்டாடை உடுத்தி இருப்பார். பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் ஆகியவற்றை திருக்கரங்களில் தாங்கியிருப்பார்.

துண்டி கணபதி

நான்கு திருக்கரங்களில், அட்சமாலை, கோடரி, ரத்ன கலசம், ஒடிந்த தந்தம் ஆகியவற்றுடன் அருள்பாலிக்கிறார் துண்டி கணபதி. இவர் காசி தலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவர்.

துவிமுக கணபதி

இரண்டு முகங்களை கொண்ட துவிமுக கணபதி, பசுமையான நீல நிறம் கொண்டவர். செம்பட்டாடை உடுத்தி, தந்தம், பாசம், அங்குசம், ரத்ன பாத்திரம் ஆகியவற்றை நான்கு திருக்கரங்களில் ஏந்தியிருப்பார்.

மும்முக கணபதி

மூன்று முகத்துடன் பொற்றாமரை ஆசனத்தில் காணப்படுபவர். சிவந்த மேனியை உடைய இவர், பாசம், அங்குசம், அட்சமாலை, அமுத கலசம், அபய, ஹஸ்த முத்திரைகளைத் தாங்கி காட்சி தருகிறார்.

சிங்க கணபதி

சிங்க கணபதி வெண்மையான நிறத்தில் இருக்கிறார். எட்டு திருக்கரங்களை கொண்ட இவர், வரதம், அபயம் முத்திரைகள் மற்றும் கற்பகக் கொடி, வீணை, தாமரை, பூங்கொத்து, ரத்ன கலசத்தை தாங்கியிருப்பார்.

யோக கணபதி

செஞ்சூரியன் நிறத்தில், நீல நிற ஆடையை தரித்த இவர், பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு ஆகியவைகளைத் ஏந்தி, யோக நிலையில் தோற்றமளிக்கிறார்.

துர்க்கா கணபதி

பசும் பொன் நிறத்தில் இருக்கும் துர்கா கணபதி, தன் 8 திருக்கரங்களில் அங்குசம், பாசம், பாணம், அட்சமாலை, தந்தம், வில், கொடி, நாவற்பழம் ஆகியவற்றைத் தாங்கி பெரிய உருவத்துடன் காணப்படுபவர்.

சங்கட ஹர கணபதி

இளஞ்சூரியன் நிறத்தில், தன் இடது தொடையில் தேவியை அமர்ந்திருப்பார். செந்தாமரை பீடத்தில் அமர்ந்து வரத முத்திரையுடன், அங்குசம், பாசம், பாயசக் கிண்ணத்தினைத் தாங்கி அருள் பாலிப்பவர்.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional


Next Story