திருச்சானூரில் பஞ்சமி தீர்த்த உற்சவம்.. தெப்பக்குளத்தில் புனித நீராடிய பக்தர்கள்
கார்த்திகை பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் இன்று மதியம் நடைபெற்றது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 28-ம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் தாயார் வாகனங்களில் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வாகன சேவை நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்நிலையில் பிரம்மோற்சவ விழாவின் சிகர நிகழ்வான பஞ்சமி தீர்த்தம் இன்று மதியம் நடைபெற்றது. இதற்காக, உற்சவ தாயார் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக திருக்குளத்தை அடைந்தார். உடன் சக்கரத்தாழ்வாரும் எழுந்தருளினார். குளக்கரையில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
பின்னர், தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது தெப்பக்குளத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர்.
கார்த்திகை மாத பஞ்சமி நாளில் திருச்சானூர் திருக்குளத்தில் பத்மாவதி தாயார் ஆயிரம் இதழ் கொண்ட தாமரை மலரில் அவதரித்தார் என்கிறது புராணம். எனவே, தாயார் அவதரித்த புனித பஞ்சமி தினத்தில், அவர் அவதரித்த அதே திருக்குளத்தில் நீராடுவதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகிறார்கள்.
பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நிகழ்வாக, நாளை (7.12.2024) மாலையில் புஷ்பயாகம் நடைபெறும்.