குமரி மாவட்ட கோவில்களில் சித்திரை விஷு கனி காணல் நிகழ்ச்சி- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நடைபெற்ற விஷு பண்டிகையில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதத்துடன் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது.
சித்திரை மாதத்தின் முதல் நாளில்தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. கேரளாவில் இந்த நாளை விஷு பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். கேரளாவை ஒட்டிய தமிழக பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் தமிழ் புத்தாண்டான சித்திரை 1-ந் தேதி சித்திரை விஷு பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வீடுகளிலும், கோவில்களிலும் கனி காணல் நிகழ்ச்சியும், கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதமாக பழங்கள், காய்கறிகள், நாணயங்கள் போன்றவற்றை கைநீட்டமாக வழங்குவதும் வழக்கம்.
அவ்வகையில் இந்த ஆண்டு இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்களில் விஷு கனி காணல் மற்றும் கைநீட்டம் எனப்படும் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
குமரி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற கோவிலான சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் நடைபெற்ற சித்திரை விஷூ கனி காணல் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மூலஸ்தான மண்டபத்தில் காய்கனிகளை குவித்து வைத்து சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் அதைத்தொடர்ந்து அம்மனுக்கு ஆபரணங்கள் தங்க மற்றும் வைரக் கிரீடம் அணிவித்து சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது.
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு காய்கனிகளுடன் ரூ.1 நாணயம் கை நீட்டமாக வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை கோவில் மேல்சாந்தி பக்தர்களுக்கு வழங்கினார்.
கேரள முறைப்படி வழிபாடுகள் நடைபெறும் முக்கிய கோவிலான திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் கோவிலிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பழங்கள் காய்கறிகள், கனிக்கொன்றை மலர்கள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளிய பகவான் முன்பு படைக்கப்பட்டது. காலை நேர பூஜைகளுக்குப்பின்னர் பக்தர்களுக்கு பிரசாதத்துடன் "கைநீட்டம்" எனப்படும் அன்பளிப்பு வழங்கப்பட்டது. அர்ச்சகர் பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கினார். அதுபோல் கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணன் சன்னதி மற்றும் ஐயப்பன் சன்னதியிலும் தனித்தனியாக பழங்கள் படைத்து விஷு கனி காணுதல் நடந்தது.
திருவட்டார் தளியல் முத்தாரம்மன் கோவிலிலும் விஷு கணி காணுதல் நடந்தது. வருகை தந்த பக்தர்களுக்கு அர்ச்சகர் பிரசாதத்துடன் கைநீட்டம் வழங்கினார்.