பங்குனி தேரோட்டம்.. பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் குவிந்த பக்தர்கள்

தேரில் மதுசூதனப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, விஸ்வக்சேனர், கிருஷ்ணர் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
குமரியின் குருவாயூர் என்று அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா கடந்த 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவிழாவையொட்டி தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, தோல்பாவை கூத்து, பக்தி இன்னிசை, பரதநாட்டியம் போன்றவை நடைபெற்றது. திருவிழாவின் 9-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது.
இதையொட்டி நேற்று காலை 9.30 மணி அளவில் இரு தட்டு வாகனங்களில் உற்சவ மூர்த்திகளை அலங்கரித்து எடுத்து வந்தனர். தேரில் மதுசூதனப்பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி, விஸ்வக்சேனர், கிருஷ்ணர் ஆகியோர் எழுந்தருளினர். அதனைத் தொடர்ந்து சிறிய தேரான பிள்ளையார் தேரில் கைலாசநாதர், பார்வதி எழுந்தருளினர். பின்னர் சாமிகளுக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு காலை 10 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. தேரோட்டத்தைக் காண, கோவில் வளாகம் மற்றும் ரத வீதிகளில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
4 ரத வீதிகளையும் சுற்றி வந்த தேர் பகல் 12.38 மணிக்கு நிலைக்கு வந்தது. பின்னர் வெடி முழக்கத்துடன் சாமிகளுக்கு அலங்கார தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு பஜனையும், இரவு 9 மணிக்கு சப்தாவர்ணமும், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளலும் நடந்தது.