மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேகம்: 4-ந் தேதி நடக்கிறது

மருதமலை:
கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி நாளை மறுநாள் (30.3.2025) மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி பெறுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது.
31-ந் தேதி காலை 9 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு, நவகோள் வேள்வி, திருமகள் வழிபாடு, விமான கலசங்கள் நிறுவுதல், நிறையாகுதி, மாலை 6 மணிக்கு வாஸ்து சாந்தி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
அடுத்த மாதம்(ஏப்ரல்) 1-ந் தேதி காலை 8.45 மணிக்கு புனித மண் எடுத்தல், புனித நீர் எடுத்தல், புனித அனல் அழைத்தல், மாலை 4.35 மணிக்கு திருச்சுற்று தெய்வங்களுக்கு எண் வகை மருந்து சாத்துதல், கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாக சாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல், விநாயக பெருமானுக்கு முதற்கால வேள்வி பூஜை ஆகியன நடைபெறுகின்றன.
2-ந் தேதி காலை 9 மணிக்கு 2-ம் கால வேள்வி பூஜை, மாலை 4.30 மணிக்கு 3-ம் கால வேள்வி பூஜை, 3-ந் தேதி காலை 9 மணிக்கு 4-ம் கால வேள்வி பூஜை, மாலை 4.30 மணிக்கு 5-ம் கால வேள்வி பூைஜ, இறைவனின் அருட்கலைகளை நாடியின் வழியே எழுந்தருள செய்தல், நிறை ஆகுதி, பேரொளி வழிபாடு நடைபெறுகிறது.
4-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால வேள்வி பூஜை, காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கு, பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம், காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து மூலவருக்கு திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி, காலை 8.30 மணிக்கு மருதாசல மூர்த்தி கோபுர விமானம், ஆதி மூலவர் கோபுர விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார கோபுர விமானங்களுக்கு கும்பாபிஷேகம், காலை 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாசலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜ பெருமாள், சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடு நடைபெறுகிறது. பின்னர் மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணியசுவாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணியசுவாமியுடன் வள்ளி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வருகிறார்.
விழாவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் உள்பட பல்வேறு ஆதினங்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
விழாவையொட்டி கோவிலின் அடிவாரத்தில் உள்ள மண்டபங்கள், மலைப்பாதை படிக்கட்டுகள், ராஜகோபுரங்கள் மற்றும் அனைத்து கோபுரங்களிலும் வர்ணம் பூசும் பணி நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், கோவில் துணை ஆணையாளர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மகேஷ் குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம் ஆகியோர் செய்து வருகின்றனர்.