திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் அச்சம்

திருப்பதி அலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் திருப்பதியில் இருந்து திருமலையில் உள்ள கோவிலுக்கு செல்ல வாகனங்களில் செல்வதற்கு ஒரு பாதை உள்ளது. இந்த வழியாக கார், பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பக்தர்கள் செல்வார்கள்.
மேலும் பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடனுக்காக திருப்பதியில் இருந்து திருமலைக்கு சுமார் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ள அலிபிரி நடைபாதை வழியாக நடந்து சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த பாதையில் பக்தர்கள் சென்று வர படிக்கட்டுகள், ஆங்காங்கே கடைகள் உள்ளன. மேலும் இந்த வழியாக விலங்குகள் வராமல் இருக்க பல இடங்களில் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையும் மீறி அடிக்கடி சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அலிபிரி நடைபாதைக்கு வந்து செல்லும். இதனை தடுக்க திருப்பதியை சேர்ந்த வனத்துறையினர் அடிக்கடி ரோந்து செல்வார்கள்.
இந்த நிலையில் அலிபிரி நடைபாதையில் உள்ள காளி கோபுரம் அருகே ஒரு சிறுத்தை நடமாடியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. சிறுத்தை நடமாட்டத்தின்போது அந்த பாதை வழியாக பக்தர்கள் யாரும் செல்லாததால் அசம்பாவிதம் எதுவும் நடைபெறவில்லை. சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்ததும் பக்தர்களும், நடைபாதையில் கடை வைத்துள்ள வியாபாரிகளும் பீதி அடைந்துள்ளனர்.
சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பக்தர்கள் தனியாக செல்லாமல் 5 முதல் 10 பேர் கொண்ட குழுக்களாக இணைந்து செல்ல வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.