குலசை தசரா திருவிழா: அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றம்.. ஏற்பாடுகள் தீவிரம்


குலசை தசரா திருவிழா: அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றம்.. ஏற்பாடுகள் தீவிரம்
x
தினத்தந்தி 13 Sep 2024 9:55 AM GMT (Updated: 13 Sep 2024 10:19 AM GMT)

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.

இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். தினமும் மாலையில் சமய சொற்பொழிவு, திருமுறை இன்னிசை, பரதநாட்டியம், வில்லிசை, இன்னிசை நிகழ்ச்சி போன்றவை நடைபெறும்.

இதை முன்னிட்டு, காளி, முருகன், குறவன், குறத்தி, குரங்கு, கரடி, அம்மன் உள்ளிட்ட வேடங்களை அணிவதற்காக பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து வருகின்றனர். இந்த திருவிழாவில் பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற பல்வேறு வேடங்கள் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் பக்தர்கள் தசரா பிறை அமைத்து, அதில் தங்கியிருந்து அம்மனை வழிபடுவர். ஒவ்வொரு ஊரிலும் பக்தர்கள் தசரா குழுக்கள் அமைத்து, வாகனங்களில் ஊர் ஊராக சென்று, கலைநிகழ்ச்சி நடத்தியும் காணிக்கை வசூலிப்பர்.

இந்த வேடங்களுக்கான ஆடைகள், கிரீடங்கள் தயாரிக்கும் பணிகள், திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆஞ்சநேயர், செங்காளி, கருங்காளி உள்ளிட்ட வேடங்களுக்கான கிரீடங்கள் தயாரிக்கும் பணியும் தீவிரமடைந்துள்ளது.

தசரா திருவிழாவையொட்டி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏராளமான சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவது வழக்கம். மேலும் பக்தர்கள் வரும் வாகனங்களை பாதுகாப்பாக விட அதன் சுற்றுப்பகுதிகளில் ஏராளமான காலியிடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


Next Story