திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவம்பர் 2-ம் தேதி தொடக்கம்: நிகழ்ச்சிகள் முழு விவரம்


தினத்தந்தி 25 Oct 2024 12:46 PM IST (Updated: 25 Oct 2024 1:19 PM IST)
t-max-icont-min-icon

கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடை பெறும் திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 2-ம் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது. கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழா நிகழ்ச்சிகள் விவரம்:

நவம்பர் 2-ம் தேதி காலையில் யாக சாலை பூஜையுடன் கந்த சஷ்டி திருவிழா தொடங்குகிறது. அன்று அதிகாலை 1மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாக சாலைக்கு புறப்படுகிறார். 7 மணிக்கு யாகபூஜை தொடங்குகிறது. காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடக்கிறது.மதியம் 12 மணிக்கு யாக பூஜையில் தீபாராதனை, 12.45 மணிக்கு வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சுவாமி ஜெயந்தி நாதர் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை நடக்கிறது. மாலை 3:30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை யும், 4 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் சுவாமி ஜெயந்தி நாதர் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

2-ம் நாள் திருவிழாவில் இருந்து 5-ம் திருவிழா வரை 3,4,5,6 ஆகிய தேதிகளில் 4 நாட்கள் வரை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் தொடர்ந்து மற்ற கால பூஜையும் நடக்கிறது. காலை 7 மணிக்கு யாக பூஜை தொடங்கி, 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடைபெற்று 12.45 மணிக்கு தங்க சப்பரத்தில் சண்முக விலாசம் மண்டபம் வந்து அங்கு தீபாராதனை ஆகி பின்னர் மாலை 4.30 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பின் கிரி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

ஆறாம் நாள் (7.11.2024) திருவிழாவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது 1.30 க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6மணிக்கு யாக பூஜை தொடங்கி மதியம் 12 மணிக்கு யாக சாலையில் தீபாராதனையும்,12.45 மணிக்கு சண்முக விலாசம் மண்டபத்தில் தீபாராதனைக்கு பின் மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனைக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சூரபத்மனை வதம் செய்ய கடற்கரையில் எழுந்தருளி சூரனை சம்ஹாரம் செய்கிறார்.

பின்னர் சந்தோஷ் மண்டபத்தில் அபிஷேகம் நடைபெற்று கோவில் சேர்தல் நடக்கிறது. அன்று 108 மகாதேவர் சன்னதியில் சாயாபிசேகம் நடைபெற்று சஷ்டி தகடு கட்டுதல் நடக்கிறது.

7-ம் நாள் திருவிழாவில் (8.11.2024) திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 3:30-க்கு விஸ்வரூபம், 4.30 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

அன்று அதிகாலை 5.30 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்காக புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுத்து தோள் மாலை மாற்றும் வைபவம் நடக்கிறது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் அருகில் உள்ள திருக்கல்யாண மேடையில் சுவாமிக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது.

8-ம் நாள் திருவிழா அன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்திலும், அம்பாள் பூம் பல்லக்கில் பட்டிண பிரவேசம் நடக்கிறது. 9,10,11 ஆகிய திருவிழா நாட்களில் திருக்கல்யாண மேடை அருகில் ஊஞ்சல் வைபவம் நடக்கிறது.12-ம் நாள் அன்று மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story