திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் கோவில் சிறப்புகள்


திருவொற்றியூர் தியாகராஜ சுவாமிகள் கோவில்
x
தினத்தந்தி 2 Sept 2024 5:39 PM IST (Updated: 2 Sept 2024 5:53 PM IST)
t-max-icont-min-icon

வரி கட்டுதல் வேண்டும் என்ற விதியிலிருந்து ஒற்றி (விலக்கி) வைக்கப்பட்டதால், இத்தலம் திருஒற்றியூர் என்னும் பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

தொண்டை நாட்டு பாடல் பெற்ற சிவ தலங்களில் மிக முக்கியமான தலம் திருவொற்றியூர் வடிவுடையம்மன் சமேத ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் கோவில். சென்னையின் வடகிழக்கு பகுதியில் உள்ள இந்த தலம், பிரம்மனின் விருப்பத்திற்கேற்ப, இறைவன் பூமியில் சுயம்புவாக முதன்முதலில் தோன்றிய தலம் என கூறப்படுகிறது. ஒற்றியூர், ஆதிபுரி என்ற பெயர்கள், இதனை உறுதி செய்கின்றன. இங்குள்ள இறைவனின் பெயர் 'ஆதிபுரீஸ்வரர்' என்பதாகும். பல்லவர் காலத்தில் செங்கற்தளியாக இருந்து, முதலாம் ராஜேந்திரசோழன் காலத்தில் கற்றளியாக எழுப்பப்பட்டது. இறைவனின் கருவறை, கஜபிருஷ்ட வடிவில் இருப்பது, பல்லவர் காலம் என்பதை உறுதி செய்கிறது.

இத்தல இறைவன் 'படம்பக்க நாதர்', 'புற்றிடங்கொண்டார்', 'எழுத்தறியும் பெருமான்' எனப் பலவாறு அழைக்கப்படுகிறார்.

இந்தப் பகுதியில் பஞ்சம் ஏற்பட்ட காலத்தில், சோழ மன்னன் அனைத்து கோவில்களின் படித்தரத்தையும் குறைத்து கட்டளை ஓலை அனுப்பினான். அந்த ஓலையை இத்தல இறைவனே திருத்தி, 'ஒற்றியூர் நீங்கலாகக் கொள்க' என எழுதியதால், இத்தலத்திற்கு திருஒற்றியூர் என்றும், இறைவனுக்கு 'எழுத்தறியும் பெருமான்' என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வரலாற்றை சிறிது மாற்றியும் கூறுவார்கள். அரசன் தனது ஆட்சிக்குட்பட்ட ஊர்களுக்கு இந்த அளவுக்கு வரி செலுத்த வேண்டும் என்று எழுதி சுற்றறிக்கையாக அனுப்பினான். அப்படி வரி விதிக்கப்பட்ட ஊர்களில் திருஒற்றியூரும் ஒன்று. ஆனால் இறைவனின் திருவருளால் அச்சுற்றறிக்கை ஓலையில் எழுதப்பட்ட வரிகள் பிளந்து அவற்றின் இடையே இவ்வாணை 'ஒற்றியூர் நீங்கலாக' என்று எழுதப்பட்டுவிட்டது. இவ்வாறு எழுதப்பட்டதை அரசனோ, அவ்வாணையை எழுதிய எழுத்தர்களோ அறியவில்லை. ஆகவே, வரி கட்டுதல் வேண்டும் என்ற விதியிலிருந்து இத்தலம் ஒற்றி (விலக்கி) வைக்கப்பட்டதால், இத்தலம் திருஒற்றியூர் என்னும் பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இந்த அற்புத நிகழ்ச்சியை சேக்கிழார் பெருமானார், "ஏட்டுவரியில் ஒற்றியூர் நீங்கல் என்ன எழுத்தறியும் நாட்ட மலரும் திருநுதலார்" என்று எடுத்து மொழிந்துள்ளார். பிரளயத்தை மேலே வராமல் தடுத்து, கடல் ஒற்றி சென்றதால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவதுண்டு.

அருணகிரிநாதர், பட்டினத்தார், ராமலிங்க சுவாமிகள், சுந்தரர், திருஞானசம்பந்தர், கம்பர் இன்னும் பல அடியவர்களால் பாடப் பெற்ற புகழ் கொண்டது இத்தலம். பட்டினத்தடிகளார் முக்தி பெற்ற தலமாகும். கலிய நாயனார், பெருமானார் தொண்டு செய்த தலமாகும். கலையழகும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமான அழகிய சிற்பங்கள் கொண்டது. சுமார் இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட இந்த ஆலயம் பூலோகத்தில் உள்ள சிவலோகமாக போற்றப்படுகிறது. "ஒற்றியூர் தொழ தொல்வினையும் ஓயும்" என்று தேவாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story