குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 3 Oct 2024 6:40 AM GMT (Updated: 3 Oct 2024 11:05 AM GMT)

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறும். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தசரா திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.

அதன்படி, இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியுள்ளது. வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் காலை 9.30 மணிக்கு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. அப்போது 'ஓம் காளி ஜெய் காளி' என்று கோஷமிட்டு அம்பாளை பக்தர்கள் மனமுறுகி வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் கடலில் நீராடி கோவிலுக்கு சென்று மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர்.





கொடியேற்றத்தை தொடர்ந்து பக்தர்கள் காப்பு கட்டினர். தசரா திருவிழாவை முன்னிட்டு 41, 21, 11 நாட்கள் விரதம் மேற்கொண்டிருக்கும் பக்தர்கள் இன்று முதல் காளி, அம்மன், குரங்கு, குறவன் குறத்தி, அனுமார், போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிய தொடங்கியுள்ளனர்.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இன்று இரவு 10 மணிக்கு அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலத்தில் வீதி உலா நடக்கிறது.

வருகிற 8-ந் தேதி 6-ம் திருவிழாவில் இருந்து தமிழகம் முழுவதும் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட தசரா குழுவினர் காப்பு கட்டி வேடம் அணிந்து மேளம், டிரம் செட், தாரை தப்பட்டையுடன் கரகாட்டம், டிஸ்கோ நடன கலைஞர்கள் கலைநிகழ்ச்சி நடத்துவார்கள்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் வருகிற 12-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. அன்று அம்பாள் மகிஷாசுரமர்த்தினி கோலம் கொண்டு கடற்கரையில் அமைந்திருக்கும் சிதம்பரேஸ்வரர் கோவில் வளாகத்தை நோக்கி அம்மன் புறப்பாடு நடைபெறும். அங்கு மகிஷாசுர வதம் நடைபெறும். முதலில் மகிஷனின் தலை, அடுத்து சிம்ம தலை, பின்னர் மகிஷாசுரனின் தலையினையும் கொய்து வெற்றிக்கொடி நாட்டுவாள்.

தொடர்ந்து வருகிற 13-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடையில் அம்மனுக்கு அபிஷேகம், அதிகாலை 2 மணிக்கு சிதம்பரேசுவரர் கோவிலில் அம்மனுக்கு சாந்தாபிஷே ஆராதனையும் நடைபெறும். தொடர்ந்து தேரில் எழுந்தருளி கோவில் கலையரங்கம் வந்தடைந்ததும் காலை 5 மணிக்கு அபிஷேக ஆராதனையும், காலை 6 மணிக்கு அன்னை முத்தாரம்மன் பூஞ்சப்பரத்தில் தெரு பவனியும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.

பின்னர் மாலை 4 மணிக்கு அம்மன் கோவில் வந்து சேர்ந்தவுடன் கொடி இறக்கப்பட்டு மாலை 4.30 மணிக்கு காப்பு களைதல் நிகழ்ச்சி நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடக்கிறது. தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story