சாத் பூஜை 2-ம் நாள்.. முழு உபவாசம் இருந்து சூரிய பகவானை வணங்கும் பக்தர்கள்
சாத் பூஜையின் இரண்டாம் நாளில் மேற்கொள்ளப்படும் சடங்கு, சூரிய பகவான் மீதான பக்தர்களின் மிகுந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.
சூரியனைப் போற்றி வணங்கும் முக்கிய பண்டிகையான சாத் பூஜை நேற்று தொடங்கியது. மொத்தம் நான்கு நாட்கள் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நஹாய்-காய் சடங்குடன் பூஜை தொடங்கியது. இதையொட்டி காலையில் காசி, கங்கை மற்றும் கர்னாலி போன்ற புண்ணிய நதிகளில் பக்தர்கள் புனித நீராடினர், பின்னர் வீட்டிற்கும் புனித நீரை எடுத்துச் சென்றனர். அதை பயன்படுத்தி பிரசாதம் தயாரிக்கத் தொடங்கினர்.
சாத் பூஜையின் இரண்டாவது நாளான இன்று கர்னா அல்லது லோகந்தா ஆகும். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடி சூரிய பகவானை வழிபட்டு விரதத்தை தொடங்கினர். நாள் முழுவதும் உணவு, நீர் எதுவும் உட்கொள்ளாமல் விரதம் இருக்கிறார்கள். மாலையில் கீர், இனிப்பு சப்பாத்தி, வாழைப்பழம் போன்ற பாரம்பரிய பிரசாதத்தை சூரிய பகவானுக்கும், அவரது சகோதரியான சாத்தி மையாவுக்கும் படைத்து வழிபடுவார்கள். இந்த பிரசாதம் விறகு அடுப்பில் சிறப்பாக தயாரிக்கப்படுகிறது.
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சிறிது நேரம் கழித்து பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும். குடும்பத்தினர் அனைவருக்கும் பிரசாதம் வழங்குவார்கள். இரண்டாம் நாளில் மேற்கொள்ளப்படும் இந்த சடங்கு, சூரிய பகவான் மீதான பக்தர்களின் மிகுந்த அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுவதுடன், அடுத்த இரண்டு நாட்களுக்கான பூஜைக்கு முத்தாய்ப்பாக அமைகிறது.
அதாவது, இரண்டாம் நாள் விரதத்தை நிறைவு செய்து பிரசாதம் சாப்பிட்ட பிறகு 36 மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் உட்கொள்ளாமல் முழு உபவாசம் இருக்க வேண்டும். இந்த உபவாசத்துடன் மூன்றாம் நாள் மாலை (7.11.2024) மறையும் சூரியனையும், நான்காம் நாள் காலை (8.11.2024) உதிக்கும் சூரியனையும் வழிபட்டு பிரசாதம் படைப்பார்கள். அதன்பின்னர் இஞ்சி அல்லது சர்க்கரை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். இத்துடன் சாத் பூஜை நிறைவடைகிறது.
பீகார் மற்றும் ஜார்க்கண்ட் உட்பட நாட்டின் பல பகுதிகளில் வெகு விமரிசையாக சாத் பூஜை கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் முழு பக்தியுடன் சூரிய பகவானை வழிபடுகின்றனர். கர்னா தினத்தை முன்னிட்டு ராஞ்சி, பாட்னா மற்றும் பிற நகரங்களில் மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. ராஞ்சியில் சாத் பூஜைக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் வசதிக்காகவும், பாதுகாப்புக்காகவும் 33 குளங்களில் 6 மருத்துவக் குழுக்களை மாவட்ட நிர்வாகம் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
மேலும், பக்தர்கள் பூஜை செய்யும் பகுதியில் கனரக வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையும், நாளை மறுநாள் (8.11.2024) அதிகாலை 2 மணி முதல் இரவு 8 மணி வரையும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.