வேண்டுதலை நிறைவேற்றும் பரிமள ரங்கநாதர்
ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், திருஇந்தளூர் தலத்தில் உள்ள பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருஇந்தளூரில் அமைந்துள்ளது பரிமள ரங்கநாதர் திருக்கோவில். திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 26-வது திவ்ய தேசமாக திகழ்கிறது. கங்கை, காவிரி, பிரம்மா, சூரியன், சந்திரன் என பலரும் பெருமாளை பூஜிக்கும் தலமாக இத்தலம் திகழ்கிறது.
பிரம்மாவிடம் இருந்து வேதங்களை திருடிச் சென்ற அசுரர்களான மது, கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு அவற்றை மீட்டு வந்தார். அசுரர்களிடம் இருந்ததால் உண்டான தோஷம் நீங்க வேதங்களுக்கு பரிமளம் அதாவது புனிதமாக்குதல் தந்தருளினார். இதனால் இவர் 'பரிமள ரங்கர்' என்று பெயர் பெற்றார்.
முற்காலத்தில் நறுமணம் வீசும் புஷ்பக்காடாக திகழ்ந்த இடத்தில் எழுந்தருளியதால் பெருமாளுக்கு 'ஸ்ரீசுகந்தவன நாதர்' என்ற பெயரும் உண்டு. சந்திரன், சந்திர புஷ்கரணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால், இவ்வூர் 'திருஇந்தளூர்' எனப் பெயர் பெற்றது.
காவிரிக்கரையில் பெருமாள் சயனித்திருக்கும் ஐந்து தலங்கள் 'பஞ்சரங்கம்' எனப்படுகிறது. அதில் ஐந்தாவது தலமான இங்கு பரிமள ரங்கநாதர், வேதாமோத விமானத்தின் கீழ் நான்கு கரங்களுடன், வீர சயனத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். மூலவர் சன்னிதியின் மேல் உள்ள விமானம் 'வேத சக்ர விமானம்' என்று அழைக்கப்படுகிறது. வேதங்களுக்கு அருளியதால் இவருக்கு 'வேதாமோதன்' என்றும் பெயர் உண்டு.
இறைவனது திருமேனி மிகவும் நுணுக்கமான வேலைப் பாடுகளுடன் பச்சை மரகதத் திருமேனியாக காண்போர் கண்ணை கவரும் வகையில் அமைந்துள்ளது. சுவாமியின் தலைக்கு மேலே சூரியனும், பாதம் அருகில் சந்திரனும், நாபியில் பிரம்மாவும், பாதத்திற்கு அருகில் கங்கா தேவியும், தலைக்கு அருகில் காவிரியும் உள்ளனர். பரிமளரங்கநாதர் திருவடிகளில் எமதர்மராஜரும், அம்பரீஷ சக்கரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். உற்சவப்பெருமாள் உபயநாச்சியாருடன் சீரிய சிம்மாசனத்தில் எழுந்தருளி காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இத்திருத்தலம் ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் 350 அடி நீளமும், 230 அடி அகலமும் கொண்டது. கோவிலின் வாசலில் சந்திர புஷ்கரணி தீர்த்தம் உள்ளது. கோவிலில் உள்ள த்வஜஸ்தம்ப மண்டபம் மற்றும் கருட மண்டபத்தின் தூண்களில் ஏராளமான சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் விஷ்ணுவின் தசாவதார வடிவங்கள் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. தனிச் சன்னிதியில் பரிமள ரங்கநாயகி தாயார் அருள்பாலிக்கிறாள்.
தாயார் சுகந்தவன நாயகி, புண்டரீகவல்லி, சந்திர சாப விமோசனவல்லி போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறாள். பரிமள ரங்கநாதரின் தெற்கு பக்கத்தில் சக்கரத்தாழ்வாருக்கு தனிச் சன்னிதி உள்ளது. ஆஞ்சநேயரும் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். ஆஞ்சநேயருக்கு தினமும் திருமஞ்சனம் நடைபெறுகிறது.
திருஇந்தளூர் பரிமள ரங்கநாதருக்கு தை அமாவாசையன்று தாயாரைப் போலவும், தாயாரான சந்திர சாப விமோசனவல்லிக்கு பெருமாளைப் போலவும் அலங்காரம் செய்வார்கள். இதனை 'மாற்றுத் திருக்கோலம்' என்று அழைப்பார்கள்.
இத்தலத்தில் கொண்டாடப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது. ஐப்பசி மாதம் கடைசி நாளில், இந்த ஊரில் உள்ள சிவன், விஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். அன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் காவிரியில் நீராடுவர்.
பிரார்த்தனை
பெண்களின் சாபத்துக்கு ஆளானவர்கள், பெண் வாரிசு வேண்டுபவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும். குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் சந்தான கோபாலனின் சிறிய விக்ரகத்தை மடியில் வைத்து பிரார்த்திக்க, புத்திர பாக்கியம் கிடைக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர். ஏகாதசி விரதம் தொடங்க நினைப்பவர்கள், இத்தல பெருமாளை வழிபட்டு தொடங்கினால் வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. பிரார்த்தனை நிறைவேறியதும் துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.
திருவிழாக்கள்
சித்திரை திருவிழா, ஆடி மாதத்தில் ஆண்டாள் ஆடி திருவிழா, புரட்டாசி மாதத்தில் தாயார் நவராத்திரி உற்சவம், ஐப்பசி துலாம் மகோற்சவம், மார்கழியில் வைகுண்ட ஏகாதசி விழா, தை மாதம் மகரசங்கராந்தி, பங்குனி பிரம்மோற்சவம் ஆகியன இத்திருத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
அமைவிடம்
மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் திருஇந்தளூர் உள்ளது. மயிலாடுதுறையில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உள்ளன.








