பாக்கெட் மணியை பயனுள்ள வகையில் கையாளுவது எப்படி?
பாக்கெட் மணி என்பது சிறு தொகை தான். நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்கள் கையிருப்பை விட விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தள்ளுபடிக்காக காத்திருந்து வாங்குவது பயனளிக்கும்.
பல வீடுகளில் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாரம் அல்லது மாத அடிப்படையில் அவர்களின் தனிப்பட்ட செலவுகளுக்காக பாக்கெட் மணியாக வழங்குவார்கள்.
இந்த செயல்முறை பிள்ளைகளுக்கு நிதி சுதந்திர உணர்வை அளிப்பதோடு, பணத்தை சரியாக மேலாண்மை செய்வது பற்றியும் கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கிறது. இவ்வாறு கிடைக்கும் பாக்கெட் மணியை பயனுள்ள வகையில் கையாள்வது அவசியம். அதைப் பற்றி இங்கே காண்போம்.
திட்டமிடல்:
பாக்கெட் மணியை எந்தெந்த தேவைகளுக்காக, எவ்வளவு செலவழிக்க வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இது தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க உதவும். சரியாக திட்டமிட்டு செலவழிக்கும் பட்சத்தில், சேமிப்பையும் அதிகரிக்க முடியும்.
உங்களிடம் இருக்கும் பணத்தின் அடிப்படையில் வாங்கவேண்டிய பொருட்களை திட்டமிடுங்கள். இது தேவையற்ற பொருட்கள் வாங்குவதைத் தவிர்க்க உதவும்.
ஆன்லைன் விளம்பரங்கள் உங்களை தேவையற்ற பொருட்கள் வாங்குவதற்கு தூண்டலாம். ஏற்கனவே உங்களிடம் இருக்கும் பொருளை திரும்பவும் வாங்கி பணத்தை வீணாக்காதீர்கள். தேவையை சரியாக அறிந்து அதற்கு மட்டுமே பணத்தை செலவழிப்பது நல்லது.
தள்ளுபடிக்காக காத்திருங்கள்:
பாக்கெட் மணி என்பது சிறு தொகை தான். நீங்கள் வாங்க நினைக்கும் பொருள், உங்கள் கையிருப்பை விட விலை அதிகமாக இருக்கும் பட்சத்தில் தள்ளுபடிக்காக காத்திருந்து வாங்குவது பயனளிக்கும். உங்களிடம் வாங்கும் அளவிற்கு பணம் இருந்தாலும் தள்ளுபடியில் வாங்குவது பணத்தை சேமிக்க உதவும்.
செலவுகளை கண்காணியுங்கள்:
நிதி மேலாண்மையில் செலவுகளை கண்காணிப்பது முக்கியம். முந்தைய மாத செலவுகளோடு, தற்போதைய செலவுகளை ஒப்பிட்டு பார்த்து பண மேலாண்மையில் நாம் செய்யும் தவறுகளை திருத்திக் கொள்ளலாம்.
உணவுக்கான செலவு:
துரித உணவுகளில் பணத்தை தொடர்ந்து விரயம் செய்வதை தவிருங்கள். ஆசைக்காக எப்போதாவது சாப்பிடலாம். தொடர்ந்து சாப்பிடுவது பணத்தை வீணாக்குவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.
சேமிப்பை முன்னிலைப்படுத்துங்கள்:
பாக்கெட் மணி முழுவதையும் செலவழித்து விடாமல் சிறுசேமிப்பை தொடங்குங்கள். பெரிய இலக்கை முன்வைத்து, அதற்காக சேமியுங்கள். அதை சேமிப்பின் மூலம் பூர்த்தி செய்து கொள்ளும்போது உங்கள் தன்னம்பிக்கை அதிகரிப்பதை உணர்வீர்கள். சேமிப்பு அவசரகாலங்களில் உங்களுக்கு கைகொடுக்கும்.