புதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை


புதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மை
x
தினத்தந்தி 10 July 2022 7:00 AM IST (Updated: 10 July 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது.

'திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்' என்பதில் ஆழமான அர்த்தம் அடங்கியுள்ளது. வெவ்வேறு வாழ்க்கைச் சூழ்நிலைகளில் வளர்ந்த இருவர், ஒன்றாக இணைந்து புதிய வாழ்க்கையை தொடங்கும்போது, பல மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும். அவற்றில் முக்கியமானது நிதி சம்பந்தமான நடவடிக்கைகள். பணம் செலவழிப்பதில் வெவ்வேறு வகையான பழக்கவழக்கங்களை கொண்ட இளம் தம்பதியினருக்கு அத்தியாவசியமான நிதிசார் நடவடிக்கைகளை இங்கே பார்க்கலாம்.

சேமிப்பு

எதிர்காலத்திற்கான முதலீடாக உள்ள பாலிசிகள், வீடு-மனை வாங்குதல் மற்றும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய இருவரும் ஒன்றாக இணைந்து திட்டமிட வேண்டும். பணி ஓய்வு காலத்துக்கான சேமிப்பு மற்றும் இதர முதலீட்டு வாய்ப்புகளை இருவரும் சேர்ந்து திட்டமிட்டு, சேமிப்புகளை இணைந்தோ அல்லது தனியாகவோ மேற்கொள்ளலாம். திருமணத்திற்கு பின்னர் கணவன் அல்லது மனைவிக்கு அவர்களது குடும்ப சொத்துக்களை நிர்வகிக்க வேண்டிய சூழல் ஏற்படும்போது இருவரும் ஒற்றுமையாக விவாதித்து செயல்படுதல் அவசியம்.

பட்ஜெட்

வங்கி தவணைகள், வீட்டு செலவுகள், இதர செலவுகள், எரிபொருள், ஷாப்பிங் செலவு, பெற்றோருக்கு தரும் மாதாந்திர பராமரிப்பு தொகை உள்ளிட்ட பலவகை செலவு விபரங்களைத் தெளிவாக கணக்கிட்டு, மாதாந்திர மற்றும் வருடாந்திர பட்ஜெட் தயார் செய்து கொள்வது நல்லது. தம்பதிகள் அவர்களது வருமான வரி சம்பந்தமான கணக்குகளையும் இணைத்துக்கொள்வது பாதுகாப்பானது.

ஒருங்கிணைப்பு

திருமணத்துக்கு முன்னர் தனிநபராக மேற்கொண்ட நிதி முதலீடுகளை, மணமான பின்னர் ஒருங்கிணைப்பது அவசியம். ஏனென்றால், அவற்றால் நன்மை ஏற்படும் நிலையில், பிரச்சினை ஏதும் இருக்காது. அதற்கு மாறாக முதலீடு பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில், தக்க ஆலோசனைக்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் தம்பதியருக்கிடையே மன உளைச்சல் உருவாகக்கூடும். குறிப்பாக, கணவன் அல்லது மனைவிக்கு நிலுவையில் இருந்த முந்தைய கடன் தவணை காரணமாக குடும்பத்தில் நிதிப் பற்றாக்குறை உருவாகாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எதிர்காலம்

குழந்தைப்பேறு, தொழில் முதலீடு, புதிய கடனுக்கான அவசியம், தனிநபர் காப்பீடு, விபத்து காப்பீடு, பணியிழப்பு போன்ற விஷயங்களில் தம்பதிகள் ஒருமித்த கருத்து கொண்டு, தெளிவாக திட்டமிட வேண்டும். நான்கு மாத வருமானத்தை, எதிர்கால அவசர செலவு நிதியாக 'லிக்விட்டி' முதலீடாக வைத்திருப்பது பாதுகாப்பானது.

நிதியுதவி

தம்பதியர் கலப்பு மணம் செய்து கொண்டவர்களாக இருந்தால், அவர்களுக்கு அரசின் நிதியுதவி கிடைக்கும். மணமான இரண்டு ஆண்டுகளுக்குள் திருமண பதிவு சான்றிதழின் அடிப்படையில் அரசு திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

தீர்மானம்

பழைய நண்பர்கள், மணமாபுதுமணத் தம்பதிகளுக்கான நிதி மேலாண்மைன பின்னர் கிடைத்த புது நண்பர்கள் ஆகியோர்களுடன் வார இறுதி விடுமுறை நாட்களில் செலவு செய்வது, கடனாக பணம் தருவது, இருவரது குடும்ப அங்கத்தினர்களுக்கு அவசர கடன் வழங்குவது, பண உதவி செய்வது போன்ற விஷயங்களில் இருவரின் ஒருமித்த முடிவே நல்லது.


Next Story