உங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறீர்களா?


உங்கள் குழந்தை வீட்டுப்பாடம் செய்ய உதவுகிறீர்களா?
x
தினத்தந்தி 27 Aug 2023 7:00 AM IST (Updated: 27 Aug 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்யவில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். ‘உன்னால் இதை செய்ய முடியும்’ எனக் கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

ல வீடுகளில் குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை, பெற்றோர்தான் செய்து கொடுக்கின்றனர். கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு வீட்டுப்பாடங்கள் செய்யக் கொடுப்பது அவர்களை செம்மைப்படுத்தவும், ஒழுக்கத்தை கற்பிக்கவும்தான். இது நம்முடைய கல்வி கட்டமைப்பில் உள்ள முக்கியமான அம்சமாகும். வீட்டுப்பாடங்களை பெற்றோரின் உதவியுடன் குழந்தை செய்யலாமே தவிர, பெற்றோரே அதை முழுமையாக செய்து கொடுக்கக்கூடாது.

ஒரு விளையாட்டு வீரனுக்கு, எவ்வாறு பயிற்சியாளர் எப்போதும் தேவைப்படுகிறாரோ, அதுபோலத்தான் பெற்றோரும் குழந்தையின் வாழ்க்கைக்கு தேவைப்படுவார்கள். விளையாட்டு வீரனுக்கு பதிலாக பயிற்சியாளர் ஓடவோ, உடற்பயிற்சி செய்யவோ மாட்டார். மாறாக, சிறந்த முறையில் வழிநடத்துவார். அதையே பெற்றோரும் பிள்ளைகளிடத்தில் பின்பற்ற வேண்டும்.

தொழில்நுட்பத்தின் அதிதீவிர வளர்ச்சியால், இந்த தலைமுறையைச் சேர்ந்த பெற்றோருக்கும், குழந்தைகளுக்கும் அதிகப்படியான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளின் கற்பனைத்திறன் முடங்கிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில் வீட்டுப்பாடம், செயல்முறை வகுப்புகள் போன்றவைதான் குழந்தைகளின் கற்பனைத்திறனை வளர்க்கும். குழந்தைகளின் வீட்டுப்பாடங்களை அவர்களே செய்வதற்கு உற்சாகப்படுத்தும் சில விஷயங்கள் இங்கே…

குழந்தைகளை அவர்கள் விரும்பும் இடத்தில் இருந்தபடி வீட்டுப்பாடம் செய்ய அனுமதியுங்கள். அந்த இடத்தில் டி.வி, மொபைல் போன்ற கவனத்தை திசைத்திருப்பும் பொருட்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடம், அவர்களின் வயதிற்கு மிக அதிகமென நினைத்தால், அதை ஆசிரியர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். மாறாக, வீட்டுப்பாடத்தை நீங்களே செய்யாதீர்கள். இது குழந்தைக்கு வீட்டுப்பாடங்கள் மீது அலட்சியத்தை ஏற்படுத்தும்.

வீட்டுப்பாடம் என்பது குழந்தைக்கு புதியதொரு விஷயத்தை கற்பிப்பதாகும். அதை உரையாடலின் வழியாகவும், வழிநடத்தலின் மூலமாகவும் நீங்களே அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தையோடு பாடம் தொடர்பாக உரையாடிக் கொண்டே இருங்கள்.

வீட்டுப்பாடத்தை குழந்தைகள் சரியாக செய்யவில்லை என்பதற்காக அவர்களை தண்டிக்காதீர்கள். 'உன்னால் இதை செய்ய முடியும்' எனக் கூறி ஊக்கப்படுத்தி அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள்.

வீட்டுப்பாடத்தை குழந்தைகள் நல்லமுறையில் செய்தால், அவர்களை பாராட்டி பரிசளியுங்கள். காபி மக், ஸ்டடி டேபிள், பழக்கூடைகள், புத்தகப்பை என அவர்களுக்கு உதவும் விஷயங்களை மட்டும் கொடுக்கலாம்.

வீட்டுப்பாடம் செய்யும்போது குழந்தைகளுக்கு சிறிதுநேரம் இடைவெளி கொடுங்கள்.

நண்பர்களோடு இணைந்து வீட்டுப்பாடம் செய்யவேண்டுமென குழந்தை விரும்பினால், அதற்கேற்ற சூழலையும் உங்கள் மேற்பார்வையில் ஏற்படுத்திக் கொடுங்கள். குழு உணர்வு மேலோங்க, இது சிறந்த பயிற்சியாகும். அத்தகைய சமயங்களில், உங்கள் குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்திறன் இருக்கும். அதில் அவர்களை மேம்படுத்துங்கள். எப்போதும் குழந்தைகளை கட்டாயப்படுத்தாதீர்கள்.

அடிக்கடி ஆசிரியரை சந்தித்து, பள்ளியில் உங்கள் குழந்தைகள் எவ்வாறு பயில்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


Next Story