எம்.எஸ்.தோனி இல்லையென்றால் கோலியின் கதை எப்போதோ முடிந்திருக்கும் - பாக். முன்னாள் வீரர் பகிர்ந்த தகவல்

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடருடன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து விராட் கோலி ஓய்வை அறிவித்தார்.

Update: 2024-07-02 02:53 GMT

கராச்சி,

இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக விளையாடி ஏராளமான சாதனைகளை படைத்து வருகிறார். நவீன கிரிக்கெட்டின் நாயகனாக செயல்பட்டு வரும் அவர், இதுவரை 26000+ ரன்களையும் 80 சதங்களையும் அடித்து இந்தியாவின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார்.

நடைபெற்று முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் 76 ரன்கள் குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த தொடர் முழுவதுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்த வேளையில் இறுதி போட்டியில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவரது தரத்தை நிரூபித்து விட்டார். இருப்பினும் இந்த போட்டி முடிந்த கையோடு சர்வதேச டி20 போட்டி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். எதிர்வரும் இளம் தலைமுறையினருக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இந்த முடிவை எடுத்ததாக கூறினார்.

இந்நிலையில் கோலியின் ஆரம்பகால கட்டம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை என்றும் பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து அவருக்கு எதிர்ப்பு வந்தும் தோனிதான் அவரை காப்பாற்றி அணியில் நீடிக்க வைத்தார் என்றும் சில தகவல்களை பாகிஸ்தான் முன்னாள் வீரரான உமர் அக்மல் பகிர்ந்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "ஒருமுறை நானும் மகேந்திர சிங் தோனியும் ஹோட்டலில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ஒருவர் தோனியிடம் வந்து விராட் கோலியை அணியை விட்டு நீக்குங்கள். இந்த முடிவை நீங்கள்தான் எடுத்தாக வேண்டும். நிச்சயம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உத்தரவு வந்திருப்பதாகவும் தோனியிடம் சொன்னார்.

ஆனால் அதற்கு தோனி அவரிடம் தாராளமாக விராட் கோலியை அணியில் விட்டு தூக்குங்கள் ஆனால் கேப்டனாக நானும் இந்த தொடரில் விளையாட மாட்டேன் என்று மேலிடத்தில் சொல்லிவிடுங்கள் என்று கறாராக பேசினார். அப்படி இளம் வீரரான விராத் கோலியின் மீது நம்பிக்கை வைத்து தோனி மேலிடத்தையே எதிர்த்து கொடுத்த வாய்ப்பினால்தான் இன்று கோலி இவ்வளவு பெரிய வீரராக வளர்ந்து டி20 கிரிக்கெட்டிலிருந்து புகழோடு ஓய்வு பெற்றிருக்கிறார். தோனியின் அந்த ஆதரவு இல்லை என்றால் கோலி எப்போதோ அணியில் இல்லாமல் சென்றிருக்க கூட வாய்ப்பு இருந்திருக்கும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்