ஐ.பி.எல்.2025: ஆர்.சி.பி. அணி இந்த துறையில் பலவீனமாக உள்ளது - பியூஷ் சாவ்லா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சு துறை பலவீனமாக உள்ளது என பியூஷ் சாவ்லா கூறியுள்ளார்.;

Update:2025-03-21 16:30 IST
ஐ.பி.எல்.2025: ஆர்.சி.பி. அணி இந்த துறையில் பலவீனமாக உள்ளது - பியூஷ் சாவ்லா

Image Courtesy: @RCBTweets / @IPL

மும்பை,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்த தொடர் குறித்து பல முன்னாள் வீரர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வரிசையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் சுழற்பந்து வீச்சு தாக்குதல்கள் மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது வலுவாக இருப்பதாகவும், பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சு துறை பலவீனமாக உள்ளதாகவும் இந்திய அணியின் முன்னாள் வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்த ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சுத் துறை மிகவும் சிறப்பாகத் தெரிகிறது. ஏனெனில் அவர்களிடம் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நூர் அகமது போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர். அதேசமயம் கே.கே.ஆர் அணி சுனில் நரைன் மற்றும் வருண் சக்கரவர்த்தி என இரு அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களைக் கொண்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் அல்லா கசான்பர் தொடரில் இருந்து விலகியுள்ளது சற்று பின்னடைவை ஏற்படுத்தலாம். ஆனால் மிட்செல் சான்ட்னெர் இருக்கும் பார்மையும், கசான்பருக்கு பதிலாக முஜீப் உர் ரஹ்மான் வருவதையும் பார்க்கும்போது, இந்த மூன்று அணிகளின் சுழற்பந்துவீச்சு துறைதான் வலுவாக இருப்பது போல் தெரிகிறது.

அதேசமயம் இந்த ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சுழற்பந்து வீச்சு துறை பலவீனமாக உள்ளது. ஏனனில் அவர்களிடம் சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்ட்யா போன்ற வீரர்கள் மட்டுமே உள்ளனர். இதில் சுயாஷ் சர்மாவிடம் அனுபவம் மிகவும் குறைவாக உள்ளது. க்ருனால் பாண்ட்யா சமீப காலங்களில் ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்