ராஜஸ்தானை வீழ்த்தி தொடரை வெற்றியுடன் தொடங்கிய ஐதராபாத்
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 70 ரன்கள் எடுத்தார்.;

Image Courtesy: @IPL
ஐதராபாத்,
10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதில் மாலை 3.30 மணிக்கு ஐதராபாத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் ஆடின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஐதராபாத் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் இஷான் கிஷன் 106 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதையடுத்து 287 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் களம் கண்டது.
ராஜஸ்தானின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் களம் இறங்கினர். இதில் ஜெய்ஸ்வால் 1 ரன்னிலும், அடுத்து வந்த ரியான் பராக் 4 ரன்னிலும், நிதிஷ் ராணா 11 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து சாம்சனுடன், துருவ் ஜுரெல் ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.
இதில் சாம்சன் 66 ரன்னிலும், துருவ் ஜுரெல் 70 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து ஷிம்ரன் ஹெட்மையர் மற்றும் சுபம் துபே ஜோடி சேர்ந்தனர். இதில் ஹெட்மையர் 42 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 242 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 44 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக துருவ் ஜுரெல் 70 ரன்கள் எடுத்தார். ஐதராபாத் தரப்பில் சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.