ஸ்ரேயாஸ் எடுத்த அந்த முடிவுதான் வெற்றிக்கு காரணம் - பாண்டிங் பேட்டி
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.;

Image Courtesy: @PunjabKingsIPL
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாபின் இம்பேக்ட் பிளேயராக வேகப்பந்து வீச்சாளர் வைஷாக் விஜயகுமார் களம் இறங்கினார். அவர் 3 ஓவரில் 28 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து அணியின் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினார். அவர் வீசிய முதல் இரண்டு ஓவர்களில் 10 ரன்களையும், மூன்றாவது ஓவரில் 18 ரன்கள் என மூன்று ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே கொடுத்ததால் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்த பின்னர் பஞ்சாபின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் ஓய்வறையில் தான் உட்கார்ந்து கொண்டிருந்தேன். குஜராத் அணியின் வெற்றிக்கு ஒரு கட்டத்தில் ஓவருக்கு 14 ரன்கள் தேவைப்பட்டபோது என்ன செய்யலாம் என ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்டேன்.
அதற்கு அவர் வைசாக் விஜயகுமாரை இம்பேக்ட் பிளேயராக அனுப்புங்கள் அவர் வந்தால் சரியாக இருக்கும் என்றார். ஏனெனில், கடைசி கட்டத்தில் அவரால் யார்க்கர் பந்துகளை வீசி போட்டியை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்று கூறினார். அவர் சொன்னபடியே வைஷாக் விஜயகுமாரை நாங்கள் உள்ளே அனுப்பினோம். அவர் சிறப்பாக பந்துவீசினார். பின்னர் எங்களால் போட்டியில் வெற்றி பெறவும் முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.