ஐ.பி.எல்.: 5 லீக் ஆட்டங்கள் நிறைவு... ஆரஞ்சு, ஊதா தொப்பி யாருக்கு..? - விவரம்
18-வது ஐ.பி.எல். தொடரில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.;
Image Courtesy: @IPL / @ChennaiIPL / @SunRisers
மும்பை,
கடந்த 22-ம் தேதி தொடங்கிய 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 5 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. அதன்படி அனைத்து அணிகளும் தங்களும் முதல் லீக் ஆட்டத்தில் விளையாடி விட்டன.
இதன் முடிவில் அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ்சு தொப்பி மற்றும் அதிக விக்கெட் வீழ்த்தியவருக்கான ஊதா தொப்பி யாரிடம் உள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம். ஐ.பி.எல் தொடரின் இடையே ஒவ்வொரு போட்டியின் முடிவில் எந்த பேட்ஸ்மேன் அதிக ரன்களைக் குவித்திருக்கிறாரோ அவருக்கு அந்த ஆரஞ்சு தொப்பி வழங்கப்படும். அது ஒவ்வொரு போட்டிக்கும் மாறிக் கொண்டே செல்லும்.
அந்த வகையில், 2025 ஐ.பி.எல் தொடரின் முதல் ஐந்து போட்டிகளின் முடிவில் இஷான் கிஷன் அதிக ரன் குவித்த பேட்ஸ்மேனாக முதலிடத்தில் இருக்கிறார். அவர் 106 ரன்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார். 2வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் (97 ரன்), 3வது இடத்தில் நிக்கோலஸ் பூரன் (75 ரன்), 4வது இடத்தில் சாய் சுதர்சன் (74 ரன்), 5வது இடத்தில் மிட்செல் மார்ஷ் (72 ரன்) உள்ளனர்.
இதேபோல், 5 போட்டிகள் முடிவில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த நூர் அகமது முதல் இடத்தில் உள்ளார். அவர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இந்த பட்டியலில் கலீல் அகமது 2வது இடத்திலும், க்ருனால் பாண்ட்யா 3வது இடத்திலும், சாய் கிஷோர் 4வது இடத்திலும், விக்னேஷ் புதூர் 5வது இடத்திலும் உள்ளனர்.
கலீல் அகமது, க்ருனால் பாண்ட்யா, சாய் கிஷோர், விக்னேஷ் புதூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளனர். ஆனால், அவர்கள் போட்டியில் விட்டுக்கொடுத்த ரன்கள் அடிப்படையில் 2 முதல் 5 இடங்களில் உள்ளனர்.