கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம்: பெங்களூரு அணியில் புவனேஸ்வர் குமார் ஏன் இடம்பெறவில்லை..?
நடப்பு ஐ.பி.எல். தொடரின் முதல் ஆட்டத்தில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின.;

image courtesy:twitter/@RCBTweets
கொல்கத்தா,
18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணியின் பிளேயிங் லெவனில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான புவனேஸ்வர் குமார் இடம் பெறாதது ரசிகர்களுக்கு மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் பெங்களூரு அணியின் பந்துவீச்சு துறையை அவர் முன்னின்று வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அவர் இந்த போட்டியில் ஏன் இடம்பெறவில்லை? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் அதற்கான காரணம் குறித்து பெங்களூரு அணி நிர்வாகம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது.
அதன்படி, "துரதிர்ஷ்டவசமாக புவி ஒரு சிறிய காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. அவர் விரைவில் திரும்பி வருவார்." என்று பதிவிட்டுள்ளது.