4-வது டி20: நியூசிலாந்து அதிரடி பேட்டிங்.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.;

Update:2025-03-23 13:39 IST
4-வது டி20: நியூசிலாந்து அதிரடி பேட்டிங்.. பாகிஸ்தானுக்கு இமாலய இலக்கு நிர்ணயம்

image courtesy:twitter/@ICC

மவுண்ட் மவுங்கானுய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற 3 போட்டிகளின் முடிவில் நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன டிம் சீபர்ட் 44 ரன்களிலும் (22 பந்துகள்) மற்றும் பின் ஆலன் 50 ரன்களிலும் (20 பந்துகள்) அதிரடியான அடித்தளம் அமைத்து கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

பின்னர் களமிறங்கிய பேட்ஸ்மேன்களில் மார்க் சாப்மேன் 24 ரன்களிலும், டேரில் மிட்செல் 29 ரன்களிலும், ஜேம்ஸ் நீஷம் மற்றும் மிச்செல் ஹே தலா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதி கட்டத்தில் கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாட நியூசிலாந்து 200 ரன்களை கடந்தது.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 220 ரன்கள் குவித்துள்ளது.மைக்கேல் பிரேஸ்வெல் 46 ரன்களுடனும் (26 பந்துகள்), சக்காரி பவுல்க்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 221 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் களமிறங்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்