97 ரன்களில் நின்ற ஸ்ரேயாஸ்.. கடைசி ஓவரில் ஸ்ட்ரைக் கொடுக்காதது ஏன்..? ஷசாங்க் சிங் விளக்கம்
குஜராத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஸ்ராயாஸ் ஐயர் 97 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.;

image courtesy: IPL
அகமதாபாத்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற குஜராத் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 232 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் அடித்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி பேட்டிங் செய்தபோது 20-வது ஓவரை சிராஜ் வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஷசாங்க் சிங் 5 பவுண்டரிகள் விளாசினார். இருப்பினும் மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் அடித்த நிலையில் இருந்தார். இதனால் இறுதி ஓவரில் ஷசாங்க் சிங், சிங்கிள் அடித்து ஐயர் சதத்தை நிறைவு செய்ய்ய உதவுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இறுதி ஓவரை முழுமையாக எதிர்கொண்ட ஷசாங்க், ஐயருக்கு ஸ்ட்ரைக்கை வழங்கவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தன்னுடைய சதத்தை பற்றி கவலைப்படாமல் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்குங்கள் என்று தம்மிடம் ஸ்ரேயாஸ் சொன்னதாக ஷசாங்க் சிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஆம் இது நல்ல கேமியோ. ஓய்வறையிலிருந்து ஸ்ரேயாஸ் ஐயரை நான் பார்த்தேன். அது எனக்கு இன்னும் அதிக உத்வேகத்தை கொடுத்தது. உண்மையை சொல்ல வேண்டுமெனில் என்னுடைய சதத்தைப் பற்றி கவலைப்படாதீர்கள் என்று ஸ்ரேயாஸ் என்னிடம் முதல் பந்திலயே சொன்னார். அதனால் பந்தைப் பார்த்து அதற்குத் தகுந்தாற்போல் அடித்தேன். பவுண்டரிகள் கிடைக்க வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருந்தேன். நான் பேட்டிங் செய்யும் இடத்தில் அசத்துவதற்கு அணி நிர்வாகத்தின் ஆதரவு முக்கியம். எனது ஷாட்டுகளை சுதந்திரத்துடன் விளையாட முயற்சிக்கிறேன். எனது பலத்துக்கு நான் ஆதரவு கொடுக்கிறேன்" என்று கூறினார்.