ரஹானேவின் அந்த முடிவே பெங்களூரு-க்கு எதிரான தோல்விக்கு காரணம் - சுரேஷ் ரெய்னா

பெங்களூருவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா தோல்வி கண்டது.;

Update:2025-03-23 17:16 IST
ரஹானேவின் அந்த முடிவே பெங்களூரு-க்கு எதிரான தோல்விக்கு காரணம் - சுரேஷ் ரெய்னா

Image Courtesy: PTI

கொல்கத்தா,

18-வது ஐ.பி.எல். தொடர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. மே 25-ந் தேதி வரை 13 இடங்களில் அரங்கேறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும்.

கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்தித்தது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் ரஹானே 56 ரன்கள் அடித்தார். பெங்களூரு அணி தரப்பில் குருணல் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

இதனையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 16.2 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக விராட் கோலி 59 ரன்களும், பில் சால்ட் 56 ரன்களும் அடித்தனர். பெங்களூரு சுழற்பந்து வீச்சாளர் குருனால் பாண்ட்யா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கொல்கத்தா தோல்வி அடைய ரஹானே கேப்டனாக செய்த சில தவறுகள் தான் காரணம் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நேற்று ரஹானே கேப்டனாக சில முடிவுகளை ஸ்மார்ட்டாக எடுத்திருக்க வேண்டும். அதாவது ரஹானே நேற்று பந்துவீச்சின் போது ஹர்ஷித் ராணாவையும், சுனில் நரேனையும் முன்கூட்டியே கொண்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் சுனில் நரேன் விராட் கோலியை நான்கு முறை ஐ.பி.எல் தொடரில் வீழ்த்தி இருக்கிறார்.

அதேபோன்று ஹர்ஷித் ராணா பவுன்சிற்கு சாதகமான இந்த மைதானத்தில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எனவே, ஒரு கேப்டனாக பந்து வீச்சாளர்களை அவர் சரியான இடத்தில் பயன்படுத்தாததே தோல்விக்கு காரணமாக மாறியது. இதன் மூலம் கேப்டன்சி பற்றி இன்னும் கொஞ்சம் அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்