பெங்களூருக்கு எதிரான ஆட்டம்:பதிரனா இடம்பெறுவாரா..? சென்னை பயிற்சியாளர் தகவல்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் பதிரனா களமிறங்கவில்லை.;

image courtesy:PTI
சென்னை,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. அதாவது 5 அணிகளுடன் தலா 2 முறை, மீதமுள்ள 4 அணிகளுடன் தலா ஒரு முறை என ஒவ்வொரு அணியும் மொத்தம் 14 லீக்கில் விளையாட வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளிபட்டியலில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும்.
இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு (வெள்ளிக்கிழமை) அரங்கேறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
முன்னதாக நடப்பு சீசனில் சென்னை அணியின் முதல் ஆட்டத்தில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான மதீஷா பதிரனா காயம் காரணமாக இடம்பெறவில்லை. இதனால் அவர் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவாரா? இல்லையா? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இது குறித்து இந்த போட்டிக்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சென்னை அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த பிளெமிங், "அவருக்கு (பதிரனா) இன்னும் காயம் முழுமையாக குணமடையவில்லை. தற்போது படிப்படியாக குணமடைந்து வருகிறார்" என்று கூறினார்.
இதனால் பதிரனா இன்றைய ஆட்டத்திலும் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.