இன்னும் 55 ரன்கள்... டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடக்கும் லீக் ஆட்டத்தில் சென்னை - பெங்களூரு அணிகள் மோத உள்ளன.;

Update:2025-03-28 16:33 IST
இன்னும் 55 ரன்கள்... டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை படைக்க உள்ள விராட் கோலி

Image Courtesy: @RCBTweets

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்றிரவு நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்கொள்கிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல்.-ல் இவ்விரு அணிகள் இதுவரை 33 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 21-ல் சென்னையும், 11-ல் பெங்களூருவும் வெற்றி பெற்றுள்ளன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. நடப்பு தொடரில் இரு அணிகளும் தாங்கள் விளையாடிய முதல் ஆட்டத்தில் வெற்றி கண்டுள்ளன. அந்த வெற்றிப்பயணத்தை தொடர இரு அணிகளும் விரும்பும்.

இதன் காரணமாக இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்திய சீனியர் வீரரான விராட் கோலி 55 ரன்கள் எடுத்தால் டி20 கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றை படைப்பார். அதாவது அவர் இந்த ஆட்டத்தில் 55 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் 13,000 ரன்களை எட்டும் 5வது வீரர் (உலக அளவில்), இந்திய அளவில் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை படைப்பார்.

முன்னதாக டி20 கிரிக்கெட்டில் இதுவரை கிறிஸ் கெய்ல் (14,562 ரன்), அலெக்ஸ் ஹேல்ஸ் (13,610 ரன்), சோயப் மாலிக் (13,557 ரன்), கைரன் பொல்லார்ட் (13,537 ரன்) மட்டுமே இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்த சாதனை பட்டியலில் விராட் கோலியும் இணையும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்