தோனி கூறிய ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் - அசுதோஷ் சர்மா

லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் அசுதோஷ் சர்மா ஆட்ட நாயகன் விருது வென்றார்.;

Update:2025-03-28 18:03 IST
தோனி கூறிய ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டேன் - அசுதோஷ் சர்மா

image courtesy:PTI

விசாகப்பட்டினம்,

ஐ.பி.எல். தொடரில் கடந்த 24-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் லக்னோ - டெல்லி அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 209 ரன்கள் குவித்தது. லக்னோ தரப்பில் நிக்கோலஸ் பூரன் 75 ரன், மிட்செல் மார்ஷ் 72 ரன் எடுத்தனர். டெல்லி தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தொடர்ந்து 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த டெல்லி 65 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து களம் புகுந்த அசுதோஷ் சர்மா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். இறுதியில் டெல்லி 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 பந்தில் 66 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் போட்டியின் முடிவில் பேசிய அவர் இந்த ஆட்ட நாயகன் விருதை தன்னுடைய ஆலோசகர் ஷிகர் தவானுக்கு அர்ப்பணிப்பதாக கூறியது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன், மகேந்திரசிங் தோனி மற்றும் ஷிகர் தவான் ஆகிய ஜாம்பவான் வீரர்கள் தமக்கு கொடுத்த ஆலோசனைகள் குறித்து சில கருத்துகளை அசுதோஷ் சர்மா கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "நான் தனியாக பயிற்சி எதுவும் செய்யவில்லை. ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரே மற்றும் சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் விளையாடியது எனக்கு அதிகமாக உதவுகிறது. டெல்லி நிர்வாகம் கூட எங்களுக்காக சீசனுக்கு முன் பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. அங்குதான் நான் எனது திறமைகளை மேம்படுத்திக் கொண்டேன். எங்களுக்கு சில பயிற்சி போட்டிகளும் இருந்தன. இது எனக்கு நிறைய பயனளித்துள்ளது. டெல்லி அணி நிர்வாகம் எங்களை உண்மையிலேயே நன்றாக கவனித்துக்கொண்டது.

நான் நிறைய பயிற்சி செய்துள்ளேன். சிக்சர் அடிக்க மட்டும் 2-3 மணிநேரம் பயிற்சிக்காக ஒதுக்குகிறேன். இது எனக்கு நிறைய உதவியது. எல்லாவற்றிற்கும் துல்லியமான பயிற்சி தேவை. மேலும் வைட் யார்க்கர்களையும் சிறப்பாக எதிர்கொள்ள நான் பயிற்சி செய்கிறேன். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தே பலன் கிடைக்கும். யார்க்கர்களுக்கு எதிராக நீங்கள் சிக்சர் அடிக்க விரும்பினால் கடின உழைப்பு மிகப்பெரிய விஷயம்.

அந்த போட்டியில், நான் கெவின் பீட்டர்சனுடன் பேசினேன். களத்தில் என்னை வெளிப்படுத்த சொன்ன அவர் எனது சொந்த திறமைகளை நம்புமாறு சொன்னார். அவர் என் மீது நிறைய தன்னம்பிக்கைக் கொண்டிருந்தார் என்று நினைக்கிறேன். அதனால் என் கொண்டாட்டத்தை அவருக்கு அர்ப்பணிக்க விரும்பினேன். அவர் ஒரு ஜாம்பவான். நாங்கள் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்தபோது, உன்னால் முடியும் என்று அவர் என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். மிகப்பெரிய வீரரான அவரிடம் கற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கிறது.

கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடியது முதலே தவான் என்னுடைய ஆலோசகர். அப்போதிலிருந்து அவர் எனக்கு நிறைய உதவிகளை செய்து வருகிறார். மனதளவில் முன்னேற்றத்தைச் சந்திக்க உதவிய அவர் ஒவ்வொரு வீரரிடமும் வித்தியாசம் இருக்கும் ஆனால் உங்களது மனநிலை மற்றும் தன்னம்பிக்கைதான் உங்களை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லும் என்று சொன்னார். அது எனக்கு நிறைய உதவியது

கடந்த வருடம் சென்னைக்கு எதிராக விளையாடியபோது தோனியிடமும் பேசினேன். களத்திற்கு சென்று போட்டியை முடிக்கும்போது உங்களது மனதில் என்ன ஓடும் கேட்டேன். அதற்கு தோனி நிறைய விஷயங்களை சொன்னார். ஆனால் அந்த ரகசியத்தை மட்டும் வெளியில் சொல்ல மாட்டேன்" என்று கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்