சமையல் அறையில் ஆயிரம் தொழில் ரகசியம்

படித்திருந்தும் மகளிர் பலர் குடும்ப சூழல், குழந்தை பேறு, பராமரிப்பு, அவர்களின் படிப்பு காரணமாக தனது கேரியரை தியாகம் செய்து வீட்டிலேயே சிறை பறவைகளாய் வாழ்ந்து வருகின்றனர். மொத்த உலகமே தொழில்நுட்பம் என்ற பெயரில் நம் கரங்களுக்குள் அடைக்கலமாகியுள்ள இந்த சூழலில், சமையல் அறையில் இருந்த ஆயிரம் தொழில்களை செய்து அசத்தலாம்.;

Update:2023-10-24 12:43 IST

மகளிர் சுயமாக தொழில் துவங்க பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, வீட்டிலேயே நாம் பயன்படுத்தும் மிக்ஸி இருந்தால் போதும், அதை வைத்து மசாலா பொடி அறைத்துக்கொடுக்கலாம். ஆர்கானிக் முறையில், சாட் மசாலா, நுாடுல்ஸ் மசாலா, மட்டன், சிக்கன் மசாலா, பிரியாணி மசாலா, கீரை சூப், கீரை பொடி என 40க்கும் மேற்பட்ட வைரைட்டி செய்து விற்கலாம். ஆர்டர் கிடைத்தவுடன் பணிகளை துவக்கினால் போதும். செய்து வைத்து விற்குமா என காத்திருக்க வேண்டியதில்லை. பெரிய பிராண்டுகள் உள்ளன; நம்மிடம் யார் வாங்குவார்கள் என்ற அச்சம் தேவையற்றது; பொருளில் தரம் இருந்தால் தானாக ஆர்டர் கிடைக்கும்.

அதே போன்று, கேக் தயாரிப்பு, சாக்லேட் தயாரிப்பு, மெழுகுவர்த்தி, சோப், அலங்கார நகை தயாரிப்பு, போன்வற்றை மிகவும் குறுகிய நாட்களில் பயிற்சி எடுத்துக்கொண்டால் அதையும் நம் வீட்டில் இருந்தே செய்து விற்க முடியும். தற்போதைய டிஜிட்டல் உலகில் தரமான பொருட்களை எளிதாக வாடிக்கையாளரிடமே கொண்டு சேர்க்க முடியும். தவிர, சிறுதானியங்களில் ஸ்நாக்ஸ் தயாரிப்பு, ரெடி மிக்ஸ் உணவு பொருட்கள் தயாரிப்பு என பல வாய்ப்புகள் உள்ளன. இதற்கு பெரிய முதலீடுகள் ஏதும் தேவையில்லை. தயக்கத்தை விடுத்து துணிந்து இறங்கினால், நீங்களும் தொழில்முனைவோராக சாதிக்க முடியும். இதுபோன்ற தொழில் பயிற்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் அரசு, தனியார் அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது. இதில் பங்கேற்று முதலில் கற்றுக்கொள்ளுங்கள்; பின் உடனடியாக களத்தில் இறங்கிவிடலாம்.

இதுபோன்று தொழில் செய்ய விரும்பும் பெண்கள், மாவட்ட தொழில் மையம் அல்லது மகளிர் திட்ட அலுவலகங்களை நேரில் அணுகினால், பல்வேறு தொழில்வாய்ப்புகள் கிடைக்கும். தனியாக செய்ய தயங்கினால், அப்பகுதியில் நான்கு, ஐந்து இல்லத்தரசிகள் இணைந்தும் இத்தொழில்களில் கால் பதிக்கலாம். அதற்கான அனைத்து உதவிகளையும் அரசு தரப்பில் பெறமுடியும்.

Tags:    

மேலும் செய்திகள்