தமிழர்களின் தனிப்பெரும் விழா..!
இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 அன்று போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது.;
தமிழர்களின் கலாசாரம் மற்றும் பண்பாட்டின் அடையாளமாக பொங்கல் பண்டிகை திகழ்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் வசித்து வரும் தமிழர்கள், ஜாதி, மதம் கடந்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடப்படும் இந்த பண்டிகை தமிழர்களின் தனிப்பெரும் விழாவாகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்பான தத்துவத்தை உள்ளடக்கியது.
பழையதை, பகைமையை விட்டொழிக்க வேண்டும் என்று போதிக்கும் போகி, சூரிய சக்தியின் பெருமையைப் பறைசாற்றி உழவர்களை முன்னிலைப்படுத்தும் பொங்கல், எல்லா உயிரினங்களையும் நேசிக்க வேண்டும் என உணர்த்தும் மாட்டுப் பொங்கல், நட்பு மற்றும் உறவுகளின் பெருமையை வலியுறுத்தும் காணும் பொங்கல்.. என பொங்கல் பண்டிகையின் ஒவ்வொரு நாளும் முக்கியமானதே.
பொங்கல் பண்டிகையானது, சங்க காலத்தில் அறுவடைத் திருநாளாகவே அறியப்பட்டது. சங்ககால இலக்கியங்களில் பொங்கல் பண்டிகை குறித்த குறிப்புகள் நேரடியாக இல்லாவிட்டாலும், தைத்திருநாளை போற்றும் வகையில் சங்க இலக்கியத்தில் பல்வேறு பாடல்கள் மற்றும் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பொங்கல் விழாவை, 'இந்திர விழா' என்று நம் முன்னோர்கள் சிறப்பித்துள்ளனர். சங்க காலத்தில் தை நீராடுதல், பாவை நோன்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளில் புதுப் பானை வாங்கி, புது அரிசியில் பால் பொங்கல் வைப்பது வழக்கம். கரும்பு, இஞ்சிக் கொத்து, மஞ்சள் கொத்து வாங்கி, மஞ்சளை சிறுசிறு துண்டாக நறுக்கி, மஞ்சள் கயிற்றில் கோர்த்து, புதுப்பானையில் கட்டி, அந்தப் பானையை அலங்கரிப்பார்கள். பொங்கல் பொங்கும் பொழுது, கிழக்கு முகமாக முதலில் பொங்கினால், சுப காரியங்கள் நடக்கும் என்பார்கள். அதேபோல் மேற்கு பக்கம் பொங்கினால் குடும்ப விருத்தி உண்டாகும். தெற்கு பக்கம் பொங்கினால் செலவு அதிகரிக்கும். வடக்கு பக்கம் பொங்கினால் பொருள் வரவு இருக்கும் என்பது நம்பிக்கை.
இந்த ஆண்டு பொங்கல் விழா 13-1-2025 (திங்கட்கிழமை) போகிப் பண்டிகையுடன் தொடங்குகிறது. 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) தைப்பொங்கல், 15-ம் தேதி (புதன்கிழமை) மாட்டுப் பொங்கல், 16-ம் தேதி (வியாழக்கிழமை) காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் என்று 4 நாட்கள் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது.