சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.;
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மாற்றுத் திறனாளிகள் சக மனிதர்களைப் போன்று அனைத்து துறைகளிலும் தங்களது உரிமையை நிலைநாட்டுவதற்கு உந்துசக்தியாக ஐக்கிய நாடுகளின் வழிகாட்டுதல்படி 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவர்களுக்கு ஆதரவளித்து, அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்கான வாய்ப்பை சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் வழங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. "உள்ளடக்கிய மற்றும் நிலையான எதிர்காலத்திற்காக மாற்றுத்திறனாளிகளின் தலைமைத்துவத்தை மேம்படுத்துதல்" என்பதே இந்த ஆண்டின் கருப்பொருள் ஆகும். அதாவது, தலைமைப் பொறுப்புகளில் மாற்றுத் திறனாளிகள் அதிக அளவில் வரவேண்டும் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.
ஒருகாலத்தில் மாற்றுத் திறனாளிகளை சமூகம் மட்டுமின்றி அவர்களின் குடும்பங்களும் பெரிய அளவில் ஆதரிக்காமல் இருந்தனர். இந்த நிலையை மாற்றி அவர்களும் அடிப்படை உரிமைகளை பெறும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டு அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய ஒதுக்கீடுகள் மற்றும் திருமண நிதியுதவி உள்ளிட்ட பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள்:
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
ஸ்வவ்லம்பன் திட்டம்:
இத்திட்டத்தின் கீழ் பிரத்தியேக அடையாள அட்டையையும் சான்றிதழையும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகின்றது. இந்தத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றிய தகவல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. கைகளால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முகமைகளின் மூலம் டிஜிட்டல் மயமாக்கப்படுகின்றன. மாற்றுத்திறனாளிகளின் தகவல்களும் அவர்கள் சார்பாக இணையதளத்தில் புதுப்பிக்கப்படுகின்றன. இதற்காக அவர்கள் பிரத்தியேக மாற்றுத்திறனாளிகள் அடையாள இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்து கொண்ட பிறகு மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளுக்கு இணையதளம் வாயிலாக அவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சான்றிதழ்கள்/ அடையாள அட்டைகளை புதுப்பிப்பதற்கும், ஏதேனும் காரணத்தால் அடையாள அட்டை தொலைந்து விட்டால் புதிய அட்டையைக் கோரியும் அவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள், சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்வதுடன் அவற்றை அச்சிட்டும் கொள்ளலாம்.