இன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.

Update: 2024-11-14 12:23 GMT

நீரிழிவு நோய் என்று அழைக்கப்படும் சர்க்கரை நோயால் அதிகரித்து வரும் உடல் நல பிரச்சினைகள், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு தினம் கடைபிடிக்கப்படுகிறது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் பாதிக்கக்கூடிய உலகளாவிய பொது சுகாதாரப் பிரச்சினையாக நீரிழிவு நோய் உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய்க்கான அறிகுறிகள் திடீரென்று தோன்றக்கூடும், இருப்பினும் டைப் 2 வகை நீரிழிவு நோயில், அவை படிப்படியாக தோன்றலாம். சில நேரங்களில் அதை உணர பல ஆண்டுகள்கூட ஆகலாம். அதிகரித்த தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், மங்கலான பார்வை, சோர்வு மற்றும் எடை இழப்பு ஆகியவை இந்நோய்க்கான பொதுவான அறிகுறிகள் ஆகும்.

இந்நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதயம், கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் நரம்புகள் போன்ற முக்கியமான உறுப்புகளில் உள்ள ரத்த நாளங்களை சேதப்படுத்தும். இது மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, நிரந்தர பார்வை இழப்பு உள்ளிட்ட கடுமையான ஆபத்தையும் ஏற்படுத்தும். சிலருக்கு நரம்புகளில் ஏற்படும் பாதிப்பின் விளைவாக கால்களில் புண்கள் ஏற்பட்டு ஆறாமல் கால்களை அகற்றவேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை இன்னும் வேகப்படுத்துவது அவசியம். அதற்கான வாய்ப்பாக உலக நீரிழிவு நோய் தினம் (சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்) அமைந்துள்ளது.

அவ்வகையில் இந்த ஆண்டு நீரிழிவு நோய் தினம் இன்று (14.11.2024) அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருப்பொருளில் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "தடைகளை உடைத்தல், இடைவெளிகளைக் குறைத்தல்" என்பதாகும். சுகாதாரப் பராமரிப்பில் உள்ளடக்கத்தில் கவனம் செலுத்துவதை இந்த கருப்பொருள் ஊக்குவிக்கிறது. மேலும், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய அரசுகள், சுகாதார நிறுவனங்கள் மற்றும் சமூகங்களிடையே ஒத்துழைப்பை வலியுறுத்துகிறது.

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைப்பதற்கும், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் சமமான, விரிவான, தரமான சிகிச்சை மற்றும் மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை உறுதிசெய்வதில் நமது உறுதிப்பாட்டை இந்த கருப்பொருள் வலியுறுத்துவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நோய் தடுப்பு முறைகளை பின்பற்றுதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிப்பதன் மூலம் நீரிழிவு நோய் வருவதைத் தடுக்கலாம். குறிப்பாக, உணவில் கட்டுப்பாடு, உடல் உழைப்பு, முறையான உடற்பயிற்சி, மன அமைதி, சரியான உடல் எடை இருப்பது அவசியம். வழக்கமான உடல் பரிசோதனையுடன், உரிய சிகிச்சையை தொடர்ந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை நீடிக்கும்.

Tags:    

மேலும் செய்திகள்