இன்று தேசிய கல்வி தினம்.. பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி முக்கியம்
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசிய கல்வி தினம் எடுத்துரைக்கிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி மந்திரி மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இன்று தேசிய கல்வி தினம் கொண்டாடப்படுகிறது.
மவுலானா அபுல் கலாம் ஆசாத், 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல், 1958-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி வரை கல்வி மந்திரியாக பணியாற்றினார்.
தேசிய கல்வி தினமான இன்று, கல்வித்துறையில் அவர் பங்களிப்புகள் நினைவுகூரப்படுகின்றன. கல்வி நிறுவனங்கள் சார்பில் கல்வியின் முக்கியத்துவம் குறித்த கருத்தரங்கங்கள், கட்டுரைப் போட்டிகள், கல்வி சார் நிகழ்ச்சிகள், பேச்சுப்போட்டிகள், ஊர்வலங்கள் நிகழ்த்தப்படுகின்றன. இதன் மூலம் எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துரைக்கிறது. கல்வி மூலம் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் முக்கியமானது. மாணவர்களின் முழுமையான வளர்ச்சியை ஊக்குவிக்கவும், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லவும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வலுவான கல்வி உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு செயலாற்றி வருகிறது. பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் அரசியலமைப்பு சட்டங்கள் மூலம் கற்றல் வாய்ப்பு மற்றும் மேம்பாட்டிற்கான வாய்ப்புகளை வழங்குவதில் அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது.
தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில், "நமது நாட்டின் இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கான அவசியம் ஏற்படாத வகையில் நமது கல்வி முறையை உருவாக்க விரும்புகிறோம். நமது நடுத்தர குடும்பங்கள் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் செலவு செய்யத் தேவையில்லை. வெளிநாட்டிலிருந்து மக்களை ஈர்க்கும் கல்வி நிறுவனங்களை உருவாக்க விரும்புகிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.