இன்று பொறியாளர்கள் தினம்..! மாணவர்கள் விரும்பும் முக்கிய பொறியியல் படிப்புகள்

இந்திய பொறியியலின் தந்தை என போற்றப்படும் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை தேசிய பொறியாளர் தினமாக கொண்டாடுகிறோம்.

Update: 2024-09-15 08:23 GMT

அறிவியல்- தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் துறையின் பல்வேறு சாதனைகளுக்கு அடித்தளமாக இருப்பது பொறியியல் (என்ஜினீயரிங்). எந்த சாதனையாக இருந்தாலும் அதில் பொறியியல் இடம்பெற்றிருக்கும். இவ்வாறு அனைத்து துறைகளிலும் பங்களிப்பை வழங்கக்கூடிய பொறியாளர்களை போற்றி கவுரவிக்கும் வகையில், உலக அளவில் பொறியாளர்கள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

உலக அளவில் பொறியாளர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை பொறியாளர்கள் தினம் செப்டம்பர் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் சிவில் என்ஜினீயர், இந்திய பொறியியலின் தந்தை என போற்றப்படும் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளையே தேசிய பொறியாளர்கள் தினமாக கொண்டாடுகிறோம். அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய பொறியாளர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விஸ்வேஸ்வரய்யாவை நினைவுகூர்ந்து பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், பொறியாளர்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தேசிய பொறியாளர் தினம் கொண்டாடும் இன்று, எந்தெந்த துறையில் உள்ள பொறியியல் பிரிவுகள் மாணவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளன என்பதை பார்ப்போம்.

பொறியியல் துறையானது தொடர்ந்து வளர்ச்சியடைந்து அடுத்தகட்ட பரிமாணத்தை அடைந்துள்ளது. பொதுவாக பொறியியல் படிப்புகளுக்கு வரவேற்பு இருந்தாலும், இந்த பட்டியலில் முன்னணியில் இருப்பது கணினி அறிவியல் பொறியியல் (கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங்) ஆகும். தொழில்நுட்ப வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்து வருவதால், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங் படிப்பு அதிகம் விரும்பப்படுகிறது.

இதேபோல் ரோபோடிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன் என்ஜினீயரிங் படிப்புக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. ரோபோ தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் விண்வெளி பொறியியல், விண்கல ஆய்வில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு இந்த படிப்பு ஏற்றது.

மெக்கானிக்கல் என்ஜினீயரிங் என்பது உற்பத்தி மற்றும் வாகனத் தொழில்களில் பணிபுரிய விரும்புவோருக்கு ஏற்றது. கட்டுமானத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற படிப்பாக சிவில் என்ஜினீயரிங் உள்ளது.

எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங், பெட்ரோலியம் என்ஜினீயரிங், கெமிக்கல் என்ஜினீயரிங், நியூக்ளியர் என்ஜினீயரிங் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் ஆகிய துறைகளும் உள்ளன. இந்த படிப்புகள் அற்புதமான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. எனவே, இந்த படிப்புகளில் சேரவும் மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள்.

இதுதவிர ஆட்டோமொபபைல், ஏரோனாட்டிக்கல், பி.டெக், இன்பர்மேசன் டெக்னாலஜி போன்ற படிப்புகளுக்கும் வரவேற்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்