சிரியாவில் என்ன நடக்கிறது? - முழு விவரம்
சிரிய அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
டமாஸ்கஸ்,
சிரியாவில் அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்ற நிலையில் அங்கு என்ன நடக்கிறது என்ற விவரத்தை காண்போம்
சிரியா:-
மத்திய கிழக்கில் அமைந்துள்ள நாடு சிரியா. சிரியாவை சுற்றி இஸ்ரேல், ஜோர்டன், லெபனான், ஈராக், துருக்கி ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.
பஷிர் அல் அசாத்:-
1971ம் ஆண்டு முதல் 2000ம் ஆண்டு வரை 31 ஆண்டுகள் சிரியாவின் அதிபராக ஹசீப் அல் அசாத் செயல்பட்டார். 2000ம் ஆண்டு ஹசீப் அல் அசாத் மரணமடைந்ததையடுத்து அவரது மகனான பஷிர் அல் அசாத் சிரியாவின் அதிபராக பொறுப்பேற்றார்.
2000 ஜுலை 17ம் தேதி பஷிர் அல் அசாத் சிரியாவின் அதிபரானார். அதேவேளை, ஹசீப் அல் அசாத்திற்கு பிறகு அவரது மகனான பஷிர் அல் அசாத் அதிபராக பொறுப்பேற்றது மக்களிடையே கிளர்ச்சியை ஏற்படுத்தியது. நாட்டில் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடைபெற வேண்டும்.
சர்வாதிகார ஆட்சி:-
சர்வாதிகார, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டுமென 2001ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். ஆனால், கிளர்ச்சியாளர்களை பஷிர் அல் அசாத் கடுமையான முறையில் ஒடுக்கினார்.
மக்கள் கிளர்ச்சி:-
அதேவேளை, பஷிர் அல் அசாத் ஆட்சிக்கு எதிராக 2011ம் ஆண்டு மீண்டும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பஷிர் அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கோரிக்கையுடன் கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த கிளர்ச்சி உள்நாட்டு போராக வெடித்தது.
அமெரிக்கா, ரஷியா தலையீடு:-
சிரியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு ஆயுதக்குழுக்கள் பஷிர் தலைமையிலான அரசுக்கு எதிராக ஆயுத போராட்டத்தில் குதித்தன.
கிளர்ச்சிக்குழுக்களுக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளும், துருக்கியும் ஆதரவு அளித்தது. இது ஷியா, சன்னி பிரிவினர் இடையேயான மோதலாக வெடித்தது. பஷிர் தலைமையிலான அரசு ஷியா இஸ்லாமியர்களின் ஆதரவு பெற்றது. கிளர்ச்சிக்குழுக்களில் பெரும்பாலானோர் சன்னி பிரிவினராக இருந்தனர்.
பஷிர் தலைமையிலான சிரியா அரசுக்கு ரஷியா, ஈரான் அரசுகள் ஆதரவு அளித்து வந்தது. ஈரானின் ஆதரவு பெற்று லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பும் பஷிர் அரசுக்கு ஆதரவு அளித்து வந்தது.
இதனால், அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கும், ரஷியாவுக்கும் இடையேயான மறைமுக போர் களமாக சிரியா மாறியது. அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பல பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். சிரியாவில் அமெரிக்க படைத்தளம், ரஷிய படைத்தளம் அமைக்கப்பட்டன.
6 லட்சம் பேர் பலி:-
கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவாக அமெரிக்க படைகளும், சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷிய படைகளும் வான்வழி தாக்குதல்கள் நடத்தின. அதேபோல், கிளர்ச்சிப்படைகளும், சிரிய அரசுப்படைகளும் மோதின. இந்த உள்நாட்டு போரில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் சிரிய அரசு படைகள் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன.
அதேவேளை, சிரியாவில் செயல்பட்டு வரும் ஹயத் தஹிர் அல் ஷம், சிரியா விடுதலை ராணுவம், சிரியாவில் உள்ள குர்திஸ்தான் பகுதியை சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் உள்பட பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் இணைந்து பஷிர் அல் அசாத் தலைமையிலான சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டன.
இதில் சில கிளர்ச்சிக்குழுக்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பை உருவாக்கின. அந்த பயங்கரவாத அமைப்பு பின்னர் அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு நாடுகளின் முயற்சியால் கிட்டத்தட்ட அழிக்கப்பட்டது. தற்போதும், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு சிரியாவின் ஒருசில பகுதிகளில் செயல்பட்டு வருகிறது.
சிரியாவை கைப்பற்றிய கிளர்ச்சிக்குழுக்கள்:-
கிளர்ச்சிக்குழுக்கள் சிரியாவில் பஷில் அல் அசாத் தலைமையிலான அரசை வீழ்த்த தொடர்ந்து சண்டையிட்டு வந்தன. தற்போது மத்திய கிழக்கில் நிலவி வரும் சூழ்நிலையை பயன்படுத்திய கிளர்ச்சிக்குழுக்கள் தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ளது.
சாதகமான சர்வதேச போர் சூழ்நிலை :-
அதன்படி, உக்ரைன் உடனான போரால் சிரியா அதிபர் அசாத் அரசுக்கு வழங்கிவந்த ஆயுத உதவி, ராணுவ உதவியை ரஷியா பெருமளவு குறைத்துக்கொண்டது.
இஸ்ரேல் உடனான போரில் லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா ஆயுதக்குழு பெரும் பாதிப்பை சந்தித்தது. அதேபோல், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் வான்பாதுகாப்பு அமைப்பு, ராணுவ கட்டமைப்புகள் பலவீனமான சூழ்நிலையில் உள்ளன.
இந்நிலையில், இந்த சூழ்நிலைகளை சாதமாக பயன்படுத்திக்கொண்ட கிளர்ச்சிக்குழுக்கள் தற்போது சிரியாவை கைப்பற்றியுள்ளன. தலைநகர் டமாஸ்கசுக்குள் நுழைந்த கிளர்ச்சிக்குழுக்கள் அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 ஆண்டுகால பஷிர் அல் அசாத் ஆட்சிக்கு முடிவு:-
கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றியுள்ள நிலையில் அதிபர் பஷிர் அல் அசாத் சிரியாவை விட்டு தப்பிச்சென்றுள்ளார். இதன் மூலம் சிரியாவில் பஷிர் அல் அசாத்தின் 24 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. அதுமட்டுமின்றி சிரியாவில் 53 ஆண்டுகால பஷிர் அல் அசாத்தின் குடும்ப ஆட்சியும் (தந்தை , மகன்) முடிவுக்கு வந்துள்ளது.
ஹயத் தஹிர் அல் ஷம் கிளர்ச்சிக்குழு:-
அதேவேளை, சிரியாவில் செயல்பட்டு வரும் கிளர்ச்சிக்குழுக்களில் ஹயத் தஹிர் அல் ஷம் என்ற கிளர்ச்சிக்குழு தற்போது முதன்மையானதாக உள்ளது. சிரியாவில் அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ இந்த கிளர்ச்சிக்குழு முக்கிய பங்காற்றியுள்ளது. இந்த கிளர்ச்சிக்குழுவின் தலைவராக அபு முகமது அல் ஜவ்லானி செயல்பட்டு வருகிறார்.
ஹயத் தஹிர் அல் ஷம் கிளர்ச்சிக்குழு 2011ம் ஆண்டு ஜம்ஹத் அல் நஸ்ரா என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. இது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பாக செயல்பட்டது. இந்த கிளர்ச்சி அமைப்பு உருவாவதில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவராக இருந்த அபு பகர் அல் பக்தாதியும் முக்கிய காரணமாக இருந்துள்ளார்.
அதேவேளை, 2016ம் ஆண்டு வாக்கில் அல்கொய்தா அமைப்புடனான தொடர்பை முறித்துக்கொண்டதாக ஹயத் தஹிர் அல் ஷம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல் ஜவ்லானி தெரிவித்தார்.
தற்போது, இந்த கிளர்ச்சிக்குழு மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் பிற கிளர்ச்சிக்குழுக்கள் இணைந்து அதிபர் பஷிர் அல் அசாத் தலைமையிலான அரசை வீழ்த்தியுள்ளது. அதிபர் அசாத் இன்று தனி விமானம் மூலம் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
சிரியாவில் அடுத்து என்ன?:-
இதையடுத்து, சிரியாவில் விரைவில் புதிய அரசு அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சிரியாவில் புதிய அரசின் தலைவராக ஹயத் தஹிர் அல் ஷம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல் ஜவ்லானி பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், நிலையான அரசு அமைய சாத்தியமற்ற சூழ்நிலை, கிளர்ச்சிக்குழுக்கள் இடையே மோதல் ஏற்படும் பட்சத்திலும், சிரியா அரசுப்படைகளின் எதிர் தாக்குதல், அமெரிக்கா, ரஷியா, ஈரான், இஸ்ரேல் உள்பட பல்வேறு நாடுகளின் நிலைப்பாடு உள்பட பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டே சிரியாவின் எதிர்காலம் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இதனால், சிரியாவில் நடைபெறும் அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.